இ ஐம் முன்னர் = இகர, ஐகார ஈற்றஃறிணைப் பெயர் முன் , அல்வழி ஆயின் - வல்லினம் அல்வழியினிடத்து வருமாயின் , இயல்பும் = இயல்பாதலும் , மிகலும் = பொது விதியான் மிகுதலும் , விகற்பமும் ஆகும் = ஒன்றற்கே ஒருகால் மிகாமையும் ஒருகால் மிகுதலும் ஆகும் . ஒப்பின் முடித்தலால், ஐகார ஈறும் உடன் கூறினார் . இயல்பு எழுவாய்த்தொடர் உம்மைத்தொகைகளிலும் மிகுதி பண்புத்தொகை, உவமைத்தொகைகளிலும் விகற்பம் சில பெயர்முன் எழுவாய்த் தொடரிலும் கொள்ளப்படும். 1. பருத்தி குறிது , யானை கரிது என எழுவாய்த் தொடரிலும் பரணிகார்த்திகை, யானைகுதிரை என உம்மைத் தொகையிலும் வலி இயல்பாயின. 2. மாசித்திங்கள், சாரைப்பாம்பு எனப் பண்புத்தொகையிலும், காவிக்கண், பனைக்கை என உவமைத்தொகையிலும் வலி மிக்கன. 3. கிளி குறிது , கிளிக் குறிது, தினை குறிது, தினைக் குறிது என எழுவாய்த் தொடரில் விகற்பித்தன. இயல்பு என்றது ' இயல்பினும் விதியினும்' என்னும் சூத்திரத்தால் எய்தியது ஒருவழி விலக்கல் ; மிகல் என்றது எய்தியது இகந்துபடாமைக் காத்தல் ; விகற்பம் என்றது எய்தியது விலக்கலுடன் விலக்காமை .
|