அகமுனர்ச் செவி கை வரின் - அகம் என்னும் இடப்பெயர் முன் செவி, கை என்னும் சினைப் பெயர்கள் வந்தால் , இடையன கெடும் - நிலைமொழிஇறுதி மகரம் வன்மைக்கு இனமாகத் திரிதலேயன்றி அதன் நடு நின்ற ககர மெய்யும் அதன் மேல் ஏறிய அகர உயிரும் கெடும் . அகம் + செவி = அஞ்செவி, அகம் + கை = அங்கை எனவரும் . கெட்டே வரும் என்னாமையால் , அகஞ்செவி , அகங்கை என வருவனவும் கொள்க . 'இடை யன கெடும்' என்றது "வன்மைக் கினமாத் திரியும் " என எய்தியதன்மேல் சிறப்புவிதி .
|