பெயரியல்

சொல் பாகுபாடு
சொல் இத்தனை வகைப்படும் என்பது

 
270அதுவே ,
இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர்வினை
எனவிரண் டாகு மிடையுரி யடுத்து
நான்கு மாந்திசை வடசொலணு காவழி .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அது இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை என இரண்டு ஆகும் = மேற்காட்டிய சொல் இயற்சொல்லும் திரிசொல்லும் என்னும் தன்மையையுடைய பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் என்று இரண்டாகும் , இடை உரி அடுத்து நான்கும் ஆம் - இவற்றுடன் இடைச் சொல்லும் உரிச்சொல்லும் அடுத்து நான்குமாகும் , திசை வடசொல் அணுகாவழி - இவற்றுடன் திசைச்சொல்லும் வடசொல்லும் சேரா இடத்து .

எனவே , அதுவே எனக் குறித்து சொல் , பெயர் இயற்சொல் , பெயர்த் திரிசொல் , வினை இயற்சொல், வினைத் திரிசொல் , இடை இயற்சொல் , இடைத் திரிசொல் , உரி இயற்சொல் , உரித் திரிசொல் என எண்வகைப்படும் என்பதும் , திசைச்சொல்லும் வடசொல்லும் சேர்ந்த இடத்துப் பத்துவகைப்படும் என்பதும் பெற்றாம் .