பெயரியல்

பெயர்ச்சொல்
உயர்திணை ஆண்பால் பெயர்

 
276அவற்றுள் ,
கிளையெண் குழூஉமுதற் பல்பொரு டிணைதேம்
ஊர்வா னகம்புற முதல நிலன்யாண்
டிருது மதிநா ளாதிக் காலந்
தோள்குழன் மார்புகண் காது முதலுறுப்
பளவறி வொப்பு வடிவு நிறங்கதி
சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்
ஓத லீத லாதிப் பல்வினை
இவையடை சுட்டு வினாப்பிற மற்றோ
டுற்ற னவ்வீறு நம்பி யாடூஉ
விடலை கோவேள் குரிசி றோன்றல்
இன்னன வாண்பெய ராகு மென்ப
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவற்றுள் = மேல் பெயரே என்றவற்றுள் , கிளை எண் குழுஉ முதல் பல்பொரு (ளோடு) = சுற்றமும் எண்ணுங் கூட்டமும் முதலாகிய பலபொருள்களோடு , திணை தேம் ஊர் வான் அகம் புறம் முதல நில (னோடு) = ஐந்திணையும் தேயமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலியனவாகிய இடங்களோடும் , யாண்டு இருது மதி நாள் ஆதிக் கால(மோடு) = வருடமும் பருவமும் மாதமும் நாள்மீனும் முதலாகிய காலங்களோடும் , தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்(போடு) - புயமும் மயிரும் மார்பும் கண்ணும் காதும் முதலாகிய அவயவங்களோடும் , அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி சாதி குடி சிறப்பு ஆதிப் பல்குண (மோடு) - அளவும் அறிவும் ஒப்பும் வடிவும் நிறமும் நாற்கதியும் சாதியும் குடியும் சிறப்பும் முதலாகிய பலகுணங்களோடும் , ஒதல் ஈதல் ஆதிப் பல்வினை(யோடு) - ஒதுதலும் கொடுத்தலும் முதலாகிய பலதொழில்களோடும் , இவை அடை சுட்டு வினாப் பிற மற்றோடு - இவற்றை அடைந்த சுட்டும் வினாவும் பிறவும் மற்றும் ஆகிய நான்கனோடும் , உற்ற னவ்வீறு - பொருந்திய னகரமெய் ஈற்றுப் பெயர்களும் , நம்பி ஆடூஉ விடலை கோ வேள் குரிசில் தோன்றல் = நம்பி முதலாகச் சொல்லப்பட்ட இப்பெயர்களும் , இன்னன - இவை போல்வன பிறவும் ; ஆண்பெயர் ஆகும் என்ப - உயர் திணை ஆண்பால் பெயர்களாகும் என்று சொல்லுவர் புலவர் .

1. பொருளால் வருபெயர்களாவன :-
தமன் , நமன், நுமன் , எமன் என்பன கிளையால் வரு பெயர்.

ஒருவன் என்பது எண்ணால் வருபெயர் .

அவையத்தான் , அத்திகோசத்தான் என்பன குழூஉவால் வருபெயர்.

பொருளன் , பொன்னன், முடியன் என்பன முதல் என்றதனால் வருபெயர் .

2. இடத்தால் வரு பெயர்களாவன :-

வெற்பன் , பொருப்பன் என்பன குறிஞ்சித் திணையால் வருபெயர் .

மறவன் , எயினன் என்பன பாலைத் திணையால் வருபெயர் .

இடையன் , ஆயன் என்பன முல்லைத் திணையால் வருபெயர்.

ஊரன் , மகிழ்நன் என்பன மருதத் திணையால் வருபெயர்.

சேர்ப்பன் , துறைவன் என்பன நெய்தல் திணையால் வருபெயர் .

சோழியன் , கொங்கன் என்பன தேயத்தால் வருபெயர் .

கருவூரான் , மதுரையான் என்பன ஊரால் வருபெயர் .

வானத்தான் , அகத்தான் , புறத்தான் என்பன வான் முதலிய மூன்றாலும் வருபெயர்.

மண்ணகத்தான் , பாதலத்தான் என்பன முதல் என்றதனால் வருபெயர்.

3.காலத்தால் வருபெயர்களாவன :
மூவாட்டையான் , பிரபவன் என்பன வருடத்தால் வருபெயர்.

வேனிலான் , காரான் என்பன பருவத்தால் வருபெயர் .

தையான் , மாசியான் என்பன மாத்ததால் வருபெயர்.

ஆதிரையான் , ஒணத்தான் என்பன நாள்மீனால் வருபெயர்.

நெருநலான் , காலையான் என்பன ஆதி என்றதனால் வருபெயர் .

4.சினையால் வருபெயர்களாவன :-

திணிதோளன் , செங்குஞ்சியன் , வரைமார்பன் , செங்கண்ணன் , குழைக்காதன் என்பன தோள்முதலிய ஐந்து உறுப்பாலும் வருபெயர்.
சூறுந்தாளன் , நெடுங்கையன் என்பன முதல் என்றதனால் வருபெயர்.

5. குணத்தால் வருபெயர்களாவன :-
பெரியன் , சிறியன் என்பன அளவால் வருபெயர் .

அறிஞன் , புலவன் என்பன அறிவால் வருபெயர் .

பொன்னொப்பான், மணியனையான் என்பன ஒப்பால் வருபெயர்.

கூனன் , குறளன் என்பன வடிவால் வருபெயர் .

கரியன் , செய்யன் என்பன நிறத்தால் வருபெயர் .

மானுடன் , தேவன் என்பன கதியால் வருபெயர்.

அந்தணன் , வேளாளன் என்பன சாதியால் வருபெயர்.

சேரன் , சோழன் , பாண்டியன் என்பன குடியால் வருபெயர்.

ஆசிரியன் , படைத்தலைவன் என்பன சிறப்பால் வருபெயர் .

நல்லன் , தீயன் என்பன ஆதியென்றதனால் வருபெயர்.

6.தொழிலால் வருபெயர்களாவன :-

ஓதுவான் , ஈவான் என்பன ஓதல் முதலாகிய இரண்டாலும் வருபெயர்.

கணக்கன் , தச்சன் என்பன ஆதி என்றதனால் வருபெயர்.

7.சுட்டால் வருபெயர் முதலானவை :-

அவன் இவன் , உவன் என்பன சுட்டு இடைச்சொல்லால் வருபெயர் .

எவன் , ஏவன் , யாவன் என்பன வினா இடைச்சொல்லால் வருபெயர்.

பிறன் , மற்றையான் என்பன பிற மற்று என்பவற்றால் வருபெயர்.

8.நம்பி முதலாகிய ஏழு பெயர்களும் உரைக்கிடையில் காண்க :

இன்னன என்றதனால் , வில்லி , வாளி, கிள்ளி, சென்னி , ஏந்தல் , செம்மல் , ஏனாதி , காவிதி , குடுமி , அண்ணல் என உயர்திணை ஆண்பால் பொருள் குறித்து வருவன எல்லாம் கொள்க.

சுட்டு, வினா, பிற, மற்று என்னும் இந்நான்கு இடைச்சொல்லையும் பற்றி வரும் பெயர்கள், பொருள் ஆதி ஆறனுள்ளே, சொல்லுவான் குறிப்பின்படி , ஒன்றில் அடங்கும்.

19