பொதுப்பாயிரம்

ஆசிரியனது வரலாறு
நல்லாசிரியன் இலக்கணம்

 
28அளக்க லாகா வளவும் பொருளுந்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அளக்கல் ஆகா அளவும் - அளவு செய்யப்படாததன் வடிவத்தின் அளவும் , (அளக்கலாகப் ) பொருளும் - அளவு செய்யப்படாத பல வகைப் பொருளும் , துளக்கல் ஆகா நிலையும் - எப்படிப்பட்ட வலிமை உடையவராலும் அசைக்கப்படாத உருவத்தின் நிலையும் , தோற்றமும் - நெடுந்தூரத்தில் உள்ளாராலும் காணப்படும் உயர்ச்சியும் , வறப்பினும் வளம் தரும் வண்மையும் - மழை பெய்யாமல் வறந்த காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர்வளத்தைக் கொடுக்கும் கொடையும் , மலைக்கு - மலைக்கு உள்ள குணங்கள் ஆகும் .

அளவு செய்யப்படாத தன் கல்வியின் அளவும் அளவு செய்யப்படாத பலவகை நூல்பொருளும் எப்படிப்பட்ட புலமையை உடையோராலும் அசைக்கப்படாத கல்வி அறிவின் நிலையும் , நெடுந்தூரத்தில் உள்ளாராலும் அறியப்படும் உணர்ச்சியும் , பொருள் வருவழி வறந்த காலத்திலும் தன்னைச் சேர்ந்த மாணாக்கருக்குக் கல்விப் பொருளைக் கொடுக்கும் கொடையும் ஆசிரியனுக்கு உள்ள குணங்கள் ஆதலால் மலை அவனுக்கு உவமானம் ஆயிற்று .