அவற்றுள் = முதற்பெயர் முதலாகச் சொல்லப்படும் இருபத்தாறும் பிறவுமாகிய பொதுப்பெயர்களுள் ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும் = ஒவ்வொன்றே இருதிணையிலும் தன்தன் பால்களை ஏற்றுவரும். எனவே, ஆண்மைப் பொதுப்பெயர் உயர்திணை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும்,பெண்மைப் பொதுப்பெயர் உயர்திணைப் பெண்பாலையும் அஃறிணைப் பெண்பாலையும், ஒருமைப் பொதுப்பெயர் உயர்திணை ஆண் ஒருமை பெண் ஒருமைகளையும் அஃறிணை ஒருமையையும், பன்மைப் பொதுப்பெயர் உயர்திணைப் பன்மையையும் அஃறிணைப் பன்மையையும் ஏற்கும் என்பதாயிற்று. முதற்பெயர் நான்கு:- சாத்தன் இவன், சாத்தன் இவ் எருது என ஆண்மை முதற்பெயர் இருதிணை ஆண்பாற்கும் பொதுவாயிற்று. சாத்தி இவள், சாத்தி இப்பசு எனப் பெண்மை முதற்பெயர் இருதிணைப் பெண்பாற்கும் பொதுவாயிற்று. கோதை இவன், கோதை இவள், கோதை இது என ஒருமை முதற்பெயர் இருதிணை ஒருமை மூன்றற்கும் பொதுவாயிற்று. கோதைகள் இவர், கோதைகள் இவை எனப் பன்மை முதற்பெயர் இரு திணைப் பன்மைக்கும் பொதுவாயிற்று. 2. சினைப்பெயர் நான்கு :- முடவன் இவன், முடவன் இவ் எருது என ஆண்மைச்சினைப் பெயர் இருதிணை ஆண்பாற்கும் பொது ஆயிற்று. முடத்தி இவள், முடத்தி இப்பசு எனப் பெண்மைச் சினைப்பெயர் இருதிணைப் பெண்பாற்கும் பொதுவாயிற்று. செவியிலி இவன், செவியிலி இவள், செவியிலி இது என ஒருமைச் சினைப்பெயர் இருதிணை ஒருமை மூன்றற்கும் பொதுவாயிற்று. செவியிலிகள் இவர், செவியிலிகள் இவை எனப் பன்மைச் சினைப்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொதுவாயிற்று. 3.சினை முதற்பெயர் நான்கு:- முடக்கொற்றன் இவன், முடக்கொற்றன் இவ் எருது என ஆண்மைச் சினைமுதற்பெயர் இருதிணை ஆண்பாற்கும் பொதுவாயிற்று. முடக்கொற்றி இவள், முடக்கொற்றி இப்பசு எனப் பெண்மைச் சினைமுதற்பெயர் இருதிணைப் பெண்பாற்கும் பொதுவாயிற்று. கொடும்புறமருதி இவன், கொடும்புறமருதி இவள்,கொடும்புறமருதி இது என ஒருமைச் சினைமுதற்பெயர் இருதிணை ஒருமை மூன்றற்கும் பொதுவாயிற்று. கொடும்புறமருதிகள் இவர், கொடும்புறமருதிகள் இவை எனப் பன்மைச் சினைமுதற்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொதுவாயிற்று. 4.முறைப்பெயர் இரண்டு:- தந்தை இவன், தந்தை இவ் எருது என ஆண்மை முறைப் பெயர் இருதிணை ஆண்பாற்கும் பொதுவாயிற்று. தாய் இவள், தாய் இப்பசு எனப் பெண்மை முறைப்பெயர் இருதிணைப் பெண்பாற்கும் பொதுவாயிற்று. 5.தன்மைப்பெயர் நான்கு:- யான் நம்பி, யான் நங்கை, யான்பூதம் என யாம் என்னும் தன்மைப்பெயர் இருதிணை ஒருமை மூன்றற்கும் பொதுவாயிற்று. நான் என்பதனோடும் இவ்வாறு ஒட்டுக. யாம் மக்கள், யாம்பூதங்கள் என யாம் என்னும் தன்மைப்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது வாயிற்று நாம் என்பதனோடும் இவ்வாறு ஒட்டுக. 6.முன்னிலைப்பெயர் ஐந்து :- நீ நம்பி, நீநங்கை, நீபூதம் என நீ என்னும் முன்னிலைப் பெயர் இருதிணை ஒருமை மூன்றற்கும் பொதுவாயிற்று. நீர்மக்கள், நீர்பூதங்கள் என நீர் என்னும் முன்னிலைப் பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது வாயிற்று. எல்லீர், நீயிர், நீவிர் என்பவற்றோடும் இவ்வாறு ஒட்டுக. 7.எல்லாம், தாம், தான்:- அவர் எல்லாம், அவை எல்லாம் என எல்லாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் பொதுவாயிற்று. அவர்தாம், அவைதாம் எனத் தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் பொதுவாயிற்று. அவன் தான், அவள் தான், அதுதான் எனத் தான் என்பது இருதிணை ஒருமை மூன்றிற்கும் பொதுவாயிற்று. 27
|