அவற்றுள் = முன் சொல்லப்பட்ட எட்டு வேற்றுமைகளுள் , எழுவாய் உருபு திரிபு இல் பெயரே = முதல் வேற்றுமையின் உருபாவது ஐ முதலிய உருபு ஏற்றுத் திரிதல் இல்லாத பெயரேயாம் , வினை பெயர் வினாக்கொளல் அதன் பயனிலை = வினையையும் பெயரையும் வினாவையும் கொள்ள வருதல் அவ் உருபினது பொருள் நிலையாய் வருதலாம். எனவே, அத் திரிபு இல்லாத பெயர் தானே தன் பொருளை வினைமுதற் பொருளாக வேற்றுமை செய்யும் என்பதாயிற்று. இவ் எழுவாய் கொள்ளும் பெயர். இன்னது, இவ் அளவிற்று என்னும் பொருள் படவரும் பெயராம். 1. சாத்தன் வந்தான் ; கொற்றன் வாழ்க - இவை தெரிநிலைவினை கொள வந்தன. அவன் பெரியன், ஆவுண்டு-இவை குறிப்புவினை கொள வந்தன. 2.சாத்தனிவன் கொற்றனவன் - இவை இன்னது என்னும் பொருள்பட வரும் பெயர் கொள வந்தன. ஆவொன்று யானை நூறு - இவை இவ் அளவிற்று என்னும் பொருள்படவரும் பெயர் கொள வந்தன. 3.அவன் யார்; ஆ யாது - இவை வினாக்கொள வந்தன. வினைமுதற் பொருளாவது ஒரு தொழில் நிகழ்ச்சியிலே தன்வயத்ததாகக் குறிக்கப்படும் பொருளாம். வினைமுதல் , செய்பவன் , கருத்தா என்பன, ஒருபொருள் சொற்கள். சாத்தன் வந்தான் என்புழித், தொழில் நிகழ்ச்சி வருதல் , அத்தொழில் நிகழ்ச்சியிலே தன்வயத்த தாகக் குறிக்கப்படும் பொருள் சாத்தன் ஆதலால், சாத்தன் வினைமுதற் பொருள். இவ் எழுவாய்க்கு, ஐ முதலியன போன்ற உருபு இல்லையாயினும், உரையிற்கோடல் என்னும் உத்தியினாலே சிறுபான்மை ஆனவன், ஆகின்றவன்,ஆவான், என்பவன் முதலிய ஐம்பால் சொற்களும் சொல் உருபுகளாக வரும் எனக்கொள்க. சாத்தன் ஆனவன் வந்தான்; சாத்தியானவள் வந்தாள், சாத்தரானவர் வந்தார்; யானை ஆனது வந்தது; யானை ஆனவை வந்தன என வரும் பிறவு மன்ன. இன்னும், இவ் உத்தியைப் பின்வரும் வேற்றுமைகளிலே காட்டப்படும் சொல்உருபுகளுக்கு எல்லாம் கொள்க. 38
|