அவை தாம் = முன்னிரண்டு சூத்திரங்களாலும் தெரிநிலையாயும் குறிப்பாயும் வரும் என்ற வினைச்சொற்கள் , முற்றும் பெய(ரெச்சம்) வினையெச்சமும் ஆகி = முற்று வினைச்சொற்களும் பெயரெச்ச வினைச்சொற்களும் வினையெச்ச வினைச்சொற்களும் ஆகி , ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும் = திணை பால் இடங்களுள் ஒன்றற்குச் சிறப்பாய் வருவனவும் பலவற்றிற்குப் பொதுமையின் நிற்பனவும் ஆகும். இவற்றிற்கு உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரங்களில் காண்க. இனி , "ஒரு மொழியொழிதன் னினங்கொளற் குரித்தே" என்பதனால், பிறவழியால் ஒன்றற்குரியவும் பொதுவுமாய் நிற்பனவும் சில உள எனக் கொள்க. 1. நடந்தான் -தன்வினை; நடத்தினான்- பிறவினை; வெளுத்தான் - தன்வினை ; பிறவினை இரண்டற்கும் பொதுவினை. 2. நடந்தான் - விதிவினை; நடவான் - மறைவினை; சாவான், வேவான் - விதிவினை மறைவினை இரண்டற்கும் பொதுவினை. 3. உண்டான் - செய்வினை; உண்ணப்பட்டது - செயப்பாட்டுவினை; புலிகொன்ற யானை , மீன் விழுங்கியவன் - செய்வினை செயப்பாட்டுவினை இரண்டற்கும் பொதுவினை. 4. தேடிய சாத்தன், தேடிய வந்தான் எனச் சொல் ஒன்றே பெயரெச்சம் வினையெச்சம் இரண்டற்கும் பொதுவாயின. இவைபோல்வன பிறவும் அன்ன. 3
|