அன்னம் ஆ(அன்னர்) தலை(மாணாக்கர்) - அன்னத்தையும் பசுவையும் போல்வார் முதன் மாணாக்கர் , மண்ணொடு கிளி (அன்னர்) இடை (மாணாக்கர்) - மண்ணையும் கிளியையும் போல்வார் நடு மாணாக்கர் , இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர் கடை மாணாக்கர் - பொள்ளற் குடத்தையும் ஆட்டையும் எருமையையும் பன்னாடையையும் போல்வார் கடை மாணாக்கர் . அன்னம் பாலையும் நீரையும் வேறு பிரித்துப் பாலை மாத்திரம் குடித்தல் போல , முதல் மாணாக்கர் குணத்தையும் குற்றத்தையும் வேறு பிரித்துக் குணத்தை மாத்திரம் கொள்ளுதலாலும் , பசு மிகுந்த புல்லை உடைய இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிறைய மேய்ந்த பின்பு ஓரிடத்திற்கு போய் இருந்து சிறிது சிறிதாக வாயில் வருவித்துக்கொண்டு மென்று தின்றல் போல , முதன் மாணாக்கர் மிகுந்த கல்வி உடைய ஆசிரியனைக் கண்டால் அக் கல்வியைத் தன்னுள்ளம் நிறையக் கேட்டுக்கொண்டு பின்பு ஓர் இடத்துப் போயிருந்து சிறிது சிறிதாக நினைவில் கொண்டு வந்து சிந்தித்தலாலும் , அவருக்கு அவ் இரண்டும் உவமானம் ஆதல் அறிக. மண் உழவர் வருந்திப் பயிர்செய் முயற்சி அளவினதாகிய விளைவைத் தன்கண் காட்டல்போல , இடை மாணாக்கர் ஆசிரியன் வருந்திக் கற்பிக்கும் முயற்சி அளவினதாகிய கல்வி அறிவைத் தம்கண் காட்டுதலாலும் , கிளி தனக்குக் கற்பித்த சொல்லையன்றி வேறு ஒன்றையும் சொல்ல மாட்டாமை போல , இடைமாணாக்கர் தமக்குக் கற்பித்த நூல் பொருளை அன்றி வேறொரு நூல் பொருளையும் சொல்ல மாட்டாமையாலும் , அவருக்கு அவ்விரண்டும் உவமானம் ஆதல் அறிக . பொள்ளற் குடம் நீரை வார்க்கும் தோறும் ஒழுக விடுதல் போலக் கடைமாணக்கர் நூல் பொருளைக் கற்பிக்கும் தோறும் மறந்து விடுதலாலும் , ஆடு ஒரு செடியிலே தழை நிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது செடிதோறும் போய் மேய்தல் போலக் கடைமாணாக்கர் ஓராசிரியன் இடத்து மிகுந்த கல்வி இருந்தாலும் புலமை நிறையக் கற்றுக்கொள்ளாது பலரிடத்தும் போய்ப் பாடங் கேட்டலாலும் , எருமை குளத்து நீரைக் கலக்கிக் குடித்தல் போலக் கடைமாணாக்கர் ஆசிரியனை வருத்திப் பாடங்கேட்டலாலும் , பன்னாடை தேன் முதலியவற்றைக் கீழே விட்டு அவற்றில் உள்ள குற்றங்களைப் பற்றிக் கொள்ளுதல் போலக் கடைமாணாக்கர் நல்ல பொருளை மறந்து விட்டுத் , தீய பொருளைச் சிந்தித்துப் பற்றிக் கொள்ளுதலாலும் , அவருக்கு அந் நான்கும் உவமானம் ஆதல் அறிக .
|