பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு விழா நிலையும் வழுவமைதியும்

 
395அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அசைநிலை = அசைநிலைக்கும் , பொருணிலை = விரைவு, வெகுளி, உவகை, அச்சம் , அவலம் முதலிய பொருள் நிலைக்கும் , இசை நிறைக்கு = இசைநிறைக்கும் , ஒருசொல் இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் = ஒரு மொழி இரண்டு மூன்று நான்கு அளவு முறையே அடுக்கும்.

எனவே, அசைநிலைக்கு இரண்டும் , பொருள்லைக்கு இரண்டும் மூன்றும் , இசைநிறைக்கு இரண்டும் மூன்றும் நான்கும் அடுக்கும் என்பதாயிற்று.

1. அன்றே அன்றே.................அசைநிலை

2. உண்டேன் உண்டேன் , போ போ போ...........விரைவு.

3. எய் எய் , ஏறி யெறி யெறி.......................வெகுளி.

4. வருக வருக , பொலிக பொலிக பொலிக....உவகை.

5. பாம்பு பாம்பு ; தீத்தீத்தீ .............................அச்சம்

6 . உய்யேன் உய்யேன் ; வாழேன் வாழேன் வாழேன் ..............அவலம் .

7 . ஏயே யம் பன் மொழிந்தனள் யாயே
நல்குமே நல்குமே நல்குமே நாமகள்
பாடுகோ பாடுகோபாடுகோ
....இசைநிறை .

ஒருசொல்லைப் பலகாற் சொல்லுதல் வழுவாயினும் இவ்விடத்தே ஆம் என்றல் வழுவமைதியும் , இதற்கு இவ் எல்லை கடவாது என்றல் வழுவாமல் காத்தலுமாம்.

44