அடை சினை முதல் முறை அடைதலும் = ஒரடையும் ஒருசினையும் ஒருமுதலும் ஒன்றையொன்று விசேடித்து வருதலும் , ஈரடை முதலோடு ஆதலும் = இரண்டு அடை முதலை விசேடித்து வருதலும் , வழக்கு இயல் = வழக்கு நடையாம் ஈரடை சினையொடு செறிதலும் = இரண்டு அடை சினையை விசேடித்து வருதலும் , மயங்கலும் = இவ்வரம்பு கடந்து வருதலும் , செய்யுட்கு = செய்யுள் நடையாம் . வழக்கு:- 1. வேற்கை முருகன் , செல்கால் நாரை , முழங்கு திரைக்கடல் - இலை ஓரடையும் ஒருசினையும் ஒருமுதலுமாகி ஒன்றை ஒன்று விசேடித்து வந்தன .
2. மனைச்சிறு கிணறு , சிறுகருங் காக்கை இவை இரண்டடை முதலை விசேடித்து வந்தன . செய்யுள்:- 1." சிறுபைந் தூவியிற் செயிரறச் செய்த " "கருநெடுங் கண்டருங் காம நோயே " இவை இரண்டடை சினையை விசேடித்து வந்தன . 2 . " பொருந்தோட் சிறுமருங்குற் பேரமர்க்கட் பேதை " , " சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய் " இவை இவ்வரம்பு கடந்து வந்தன . அடைசினை முதன் முறை அடைதல் ஒன்றும் வழுவாமற் காத்தலும் , ஒழிந்த மூன்றும் வழு அமைதியுமாம் என்க . 52
|