பொதுப்பாயிரம்

பாடங் கேட்டலின் வரலாறு

 
46அழலி னீங்கா னணுகா னஞ்சி
நிழலி னீங்கா னிறைந்த நெஞ்சமோ
டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அழலின் - குளிர் காய்வோன் விட்டு நீங்காமலும் நெருங்காமலும் இருக்கின்ற நெருப்பைப் போல ஆசிரியனை நினைத்து; அஞ்சி நீங்கான் அணுகான்- அச்சமுற்று விட்டு நீங்கான் ஆகியும் நெருங்கான் ஆகியும் இருந்து; நிழலின் நீங்கான் - விடாது பின் செல்லும் நிழலைப் போலத் தொடர்ந்து சென்று , நிறைந்த நெஞ்ச மோடு - அன்பு நிறைந்த கருத்துடனே கூடி , எத் திறத்து ஆசான் உவக்கும் - எத்தன்மையினாலே ஆசிரியனானவன் மகிழ்வான் , அத்திறம் அறத்தின் திரியாப் படர்ச்சி - அத் தன்மையோடு பொருந்தி அறத்தினின்றும் வேறுபடாது நடத்தலானது , வழிபாடு - மாணாக்கன் செய்யும் வழி பாடாகும் .

அழலின் என்பதற்கு ஆசிரியன் கோபித்தால் எனப் பொருள் கூறினும் பொருந்தும்.