அம் முதல் ஈராறு ஆவி ( என ) - நெடுங்கணக்கின் உள் அகரம்முதலிய பன்னிரண்டனையும் உயிர் எழுத்து என்றும் , கம் முதல் மூவாறு மெய் என - ககரம்முதலிய பதினெட்டனையும் மெய்யெழுத்தென்றும் , விளம்பினர் புலவர் - சொன்னார் அறிவுடையோர் . அகரம்முதலிய பன்னிரண்டும் உயிர் போலத் தனித்து இயங்கும் வன்மை உடைமையால் உயிர் எனவும் , ககரம்முதலிய பதினெட்டும் உயிரோடு கூடி அல்லது இயங்கும் வன்மை இல்லாத மெய்போல அகரத்தோடு கூடி அல்லது இயங்கும் வன்மை இல்லாமையால் மெய் எனவும் பெயர் பெற்றன . இவை உவம ஆகுபெயராய்க் காரணப் பொதுப் பெயராயின . பிறவும் இப்படியே வருதல் காண்க .
|