எழுத்தியல்

மாத்திரை
மாத்திரைக்குப் புறனடை

 
101ஆவியு மொற்று மளவிறந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆவியும் ஒற்றும்-முதலுஞ் சார்புமாகிய உயிரெழுத்துக்களும் அவ்விருவகைமெய்யெழுத்துக்களும் , அளவு இறந்து இசைத்தலும் மேவும்-முன் சொன்ன அளவை கடந்து மிக்கு ஒலித்தலையும் பொருந்தும் , இசை விளி பண்ட மாற்று ஆதியின் - இராகமும் அழைத்தலும் பண்டமாற்றலும் முதலியவைகளிடத்து .

ஆதி என்றதனால் முறையீடு , புலம்பல் முதலியவைகளும் கொள்க .

இராகத்தில் அளவிறந்து ஒலிக்கும் இடத்து, உயிர் பன்னிரண்டு மாத்திரை ஈறாகவும் ஒலிக்கும் என்றார் இசை நூலார் ; இது பிறநூல் முடிந்தது தான் உடன்படுதல் என்னும் உத்தி.

இச் சூத்திரம் 'இயல்பெழும்' (சூ. 100) என்னும் சூத்திரத்தைத் தழுவாது அதற்கு முன் நின்ற 'மூன்றுயிரளபு' (சூ.99) என்னும் சூத்திரத்தைத் தழுவி நின்றதனாலே, தவளைப்பாய்த்து.