ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை ஏவல் முன் - உயிரையும் ய , ர , ழ என்னும் மூன்று மெய்களையும் இறுதியாக உடைய முன்னிலை வினை முன்னும் , ஏவல் வினை முன்னும் , வல்லினம் இயல்பொடு விகற்பு - வரும் க , ச , த , பக்கள் இயல்புடனே விகற்பமாம் . முன்னிலைவினை என்றது , தன்மைவினை படர்க்கை வினைகளுக்கு இனமாய் , முன் நின்றான் தொழிலையுணர்த்தும் வினையை ஏவல்வினை யென்றது , இன மின்றி முன்னிலை ஒன்றற்கே உரியதாய் , முன்நின்றானைத் தொழிற்படுத்தும் வினையை . விகற்பமாவது , ஒருகால் இயல்பாயும் ஒருகால் விகாரமாயும் புணர்வது . விகற்பம் , உறழ்ச்சி என்பன ஒரு பொருள் சொற்கள் . 1 . உண்டி , உண்டனை , உண்டாய் எனவும் உண்டனிர் , உண்டீர் எனவும் , நிறுத்தி , சாத்தா , கொற்றா , தேவா , பூதா எனவும் , சாத்தரே , கொற்றரே , தேவரே , பூதரே எனவும் வருவித்து , உண்டி சாத்தா , உண்டனிர் சாத்தரே எனக் கூட்டி , ஆவி , ய , ர இறுதி முன்னிலை வினை முன் இயல் பாதல் காண்க . ழகர மெய் முன்னிலைவினைக்கு ஈறாகாது , முன்னிலை வினைமுன் விகற்பம் வந்த வழிக் காண்க . 2. கொணா , எறி , விடு , ஆய் , சேர் , தாழ் என நிறுத்தி , சாத்தா , கொற்றா , தேவா , பூதா என வருவித்து , கொணா சாத்தா என முறையே கூட்டி , ஆவி , ய , ர , ழ இறுதி ஏவல்வினைமுன் இயல்பாதல் காண்க . நட கொற்றா , நடக் கொற்றா , எய் கொற்றா , எய்க் கொற்றா என ஏவல்வினை முன் விகற்பித்தல் காண்க .
|