உயிரீற்றுப் புணரியல்

ஈகார வீற்றுச் சிறப்புவிதி

 
177ஆமுன் பகரவீ யனைத்தும் வரக்குறுகும்
மேலன வல்வழி யியல்பா கும்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆ முன் பகர ஈ அனைத்தும் வரக்குறுகும் = ஆ என்னும் பெயர் முன் நின்ற பகர ஈகாரம் இரு வழியும் நாற்கணமும் வரின் குறுகும் , அல்வழி மேலன இயல்பு ஆகும் = குறுகி விதி இகர ஈறாக நின்ற அதன்மேல் வரும் வல்லினம் அல்வழியிலே மேலைச் சூத்திரத்துள் கூறிய விதி மூன்றனுள் இயல்பைப் பெறும் .

பகரவீ என்றது இடக்கரடக்கல் ; வரும் சூத்திரத்தில் பவ்வீ என்பதும் அது, இடக்கர் என்பது சபையிலே சொல்லத்தகாத சொல். இடக்கர், அவையல்கிளவி என்பன ஒரு பொருட் சொற்கள். இடக்கரடக்கல் என்பது சொல்லத்தகாத சொல்லை அவ் வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டால் சொல்லல் .

ஆப்பி யரிது, ஆப்பி குளிரும், ஆப்பி நன்று, ஆப்பி வலிது எனவும்,

ஆப்பி யருமை, ஆப்பி குளிர்ச்சி, ஆப்பி நன்மை, ஆப்பி வன்மை எனவும் வரும்.

'ஆ முன் பகரவீ அனைத்தும் வரக்குறுகும்' என்றது எய்தாதது எய்வித்தல் ; அஃது எய்திய வழி வரும் வல்லினம் 'அல்வழியில் இயல்பாகும் ' என்றது மேலைச் சூத்திரத்தால் எய்தியது. இகந்துபடாமைக் காத்தல்.