பெயரியல்

பெயர்ச்சொல்
முதல்பெயர் முதலிய நான்கையும் வகுத்தல்

 
283ஆண்மை பெண்மை யொருமை பன்மையின்
ஆமந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின் = ஆண்மை முதலாகிய இந்நான்கு பாலும் காரணமாக, அந் நான்மைகள் ஆம் = அம்முதற்பெயர் சினைப்பெயர் சினை முதற்பெயர் என்னும் மூன்றும் ஒவ்வொன்று நந்நான்காகும், ஆண் பெண் முறைப்பெயர் = ஆண்மை பெண்மை என்னும் இருபாலும் காரணமாக முறைப்பெயர் இரண்டாகும்.

1. சாத்தன் - ஆண்மை முதற் பெயர், சாத்தி - பெண்மை முதற் பெயர். கோதை - ஒருமைமுதற்பெயர், கோதைகள்- பன்மை முதற்பெயர்.

2.முடவன் - ஆண்மைச் சினைப்பெயர். முடத்தி - பெண்மைச் சினைப்பெயர். செவியிலி- ஒருமைச் சினைப்பெயர். செவியிலிகள் - பன்மைச் சினைப்பெயர்.

3.முடக்கொற்றன் - ஆண்மைச் சினைமுதற் பெயர். முடக்கொற்றி - பெண்மைச் சினை முதற்பெயர். கொடும்புற மருதி - ஒருமைச்சினைமுதற் பெயர். கொடும்புறமருதிகள் - பன்மைச் சினைமுதற் பெயர்.

4.தந்தை ஆண்மை முறைப்பெயர் தாய் பெண்மை முறைப் பெயர்.