பெயரியல்

வேற்றுமை
ஆறாம் வேற்றுமை

 
300ஆற னொருமைக் கதுவு மாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப்
பொன்றன் கூட்டம் பலவி னீட்டந்
திரிபி னாக்க மாந்தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் = ஆறாம் வேற்றுமையினது வருமொழியின் ஒருமைப் பொருண்மைக்கு முன் சொல்லப்பட்ட அதுவேயன்றி ஆதுவும் , பன்மைக்கு அவ்வும் உருபு ஆம் = வருமொழியின் பன்மைப் பொருன்மைக்கு அகரமும் உருபாம், பொருள் = அவற்றின் பொருள்களாவன, பண்பு = குணமும் தொழிலும் ஆகிய பண்பும், உறுப்பு = அவயமும், ஒன்றன் கூட்டம் = ஒரு பொருட் கூட்டமும்; பலவின் ஈட்டம் = பலபொருள்கூட்டமும், திரிபின் ஆக்கம் = ஒன்று திரிந்து ஒன்று ஆதலும் , ஆம் தற்கிழமையும் = ஆகிய ஐந்து தற்கிழமைப் பொருள்களையும், பிறிதின் கிழமை = அவை அல்லாத பிரிதின் கிழமைப் பொருள்களையும், பேணுதல் = உடையனவாக அவ் உருபுகளை ஏற்ற பெயர்ப்பொருள்கள் வேறுபட்ட இவ்விருவகைச் சம்பந்தப் பொருள்களுமாம்.

தற்கிழமைப் பொருளாவது தன்னோடு ஒற்றுமை உடையது. பிறிதின் கிழமைப் பொருளாவது தன்னின் வேறு ஆயது. தற்கிழமைப் பொருள் இவை எனவே, இவை அல்லாத பொருளும் இடமும் காலமும் ஆகிய மூன்றும் பிறிதின் கிழமைப்பொருளுள் என்றாகும். ஆகவே, இப்படிப் பலவகையாலும் வரும் சம்பந்தப் பொருளே இவ்வேற்றுமை உருபுகளின் பொருள் என்பதாயிற்று.

1. தற்கிழமை

சாத்தனது கருமை - குணம்
சாத்தனது வரவு - தொழில்
பண்புத் தற்கிழமை
சாத்தனது கை
புலியது வால்
உறுப்புத் தற்கிழமை
மாந்தரது தொகுதி
நெல்லது குப்பை
ஒன்றன் கூட்டத் தற்கிழமை
படைகளது தொகுதி
பறவைகளது கூட்டம்
பலவின் கூட்டத் தற்கிழமை
நெல்லினது பொரி
மஞ்சளது பொடி
ஒன்றுதிரிந்து ஒன்று ஆயதன்தற்கிழமை .

2 . பிறிதின் கிழமை

சாத்தனது பசு
முருகனது வேல்
பொருட் பிறிதின் கிழமை
சாத்தினது வீடு
முருகனது குறிஞ்சி
இடப் பிறிதின் கிழமை
சாத்தனது நாள்
மாரனது வேனில்
காலப் பிறிதின் கிழமை .

எனாது கை , நினாது தலை , தனாது புறம் ....... ஆது உருபு , என கைகள் , தனதாள்கள் அகர உருபு . இராகுவினது தலை , எனதுயிர் என ஆறனுருபு , உடையதும் உடைமைப்பொருளும் வேறாகாத ஒற்றுமைப் பொருளில் வருதலும் கொள்க . இராகுவே தலையாதலாலும் , நான் எனப்பட்டது உயிரே ஆதலாலும் ஒற்றுமைப் பொருளாயின . ஒற்றுமை என்பது அபேதம் .

அஃறிணை ஒருமை பன்மைகளுக்கு இயைந்த உருபுகள் இங்ஙனம் கூறவே , உயர்திணை ஒருமை பன்மை ஆகிய கிழமைப்பொருளுக்கு இவ்வுருபுகள் ஏலா என்பது பெற்றாம் , உயர்திணைப் பெயர் வரும்போது , சாத்தனுக்கு மகன் எனக் குவ் உருபு வருமென்றறிக . சிறு பான்மை , அரனது தோழன் , குன்றவர் தமது செம்மல் என உயர்திணை ஒருமைப் பொருண்மைக்கும் . நினதடியாரொடல்லால் என உயர்திணைப் பன்மைப் பொருண்மைக்கும் , எனது கைகள் என அஃறிணைப் பன்மைப் பொருண்மைக்கும் அது உருபும் வரும் .

இவ்வாறன் உருபுகளுள் ஒன்று நிற்றற்குரிய இடத்தே உடைய என்பது சொல் உருபாக வரும் .

சாத்தனுடைய புதல்வன் , சாத்தனுடைய புதல்வர் ; சாத்தனுடைய வீடு , சாத்தனுடைய வீடுகள் என வரும் .

இவ்வீடு எனது , அத்தோட்டம் அவனது என வருவனவற்றில் , எனது , அவனது என்பன , துவ்விகுதியும் அகரச்சாரியையும் பெற்று நின்ற குறிப்பு வினைமுற்று . எனது போயிற்று , அவனதை வாங்கினேன் என வருவனவற்றில் எனது , அவனது என்பன , மேற்கூறியபடி வந்த குறிப்பு வினையாலணையும்பெயர் , இங்ஙனம் அன்றி , இவ்விடங்களில் வரும் அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு அன்று .

43