பெயரியல்

பெயர்ச்சொல்
உயர் திணைப் பெண்பால் பெயர்

 
277கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவுந்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோ டின்னன பெண்பாற் பெயரே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
கிளை முதல் ஆகக் கிளந்த பொருள்களுள் -மேலைச் சூத்திரத்துச் சுற்றம் முதலாகப் பகுத்துச் சொல்லப் பட்ட அறுவகைப் பொருள்களுள், ளவ்வொற்று இகரக்கு ஏற்ற ஈற்றவும் - ளகரமெய்யும் இகருஉயிரும் பொருந்துதற்கு ஏற்ற அவ் இரண்டு ஈற்றுப் பெயர்களும், தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோடு - தோழி முதலாக எடுத்துச்சொல்லப் பட்ட பெயர்களுமாகிய இவற்றுடனே, இன்னன - இவை போல்வன பிறவும், பெண்பாற்பெயர் - உயர்திணைப் பெண்பால் பெயர்களாம்.

1. பொருளால் வருபெயர்;-

தமள், நமள், நுமள், எமள், எனவும், ஒருத்தி எனவும், அவையத்தாள், அவையத்தி எனவும், பொன்னாள், பொன்னி எனவும் வரும்.

2.இடத்தால் வருபெயர்:-

குறத்தி, எயிற்றி, ஆய்ச்சி, உழத்தி, பரத்தி எனவும், மலையாட்டி, சோழிச்சி எனவும், கருவூராள், கருவூரி எனவும், வானத்தாள், வானத்தி எனவும், அகத்தாள், அகத்தி எனவும், புறத்தாள், புறத்தி எனவும் மண்ணகத்தாள், மண்ணகத்தி எனவும் வரும்.

3. காலத்தால் வருபெயர்:-

மூவாட்டையாள் எனவும், வேனிலாள் எனவும் தையாள் எனவும், ஆதிரையாள் எனவும், நெருநலாள் எனவும் வரும்.

4. சினையால் வருபெயர்

திணிதோளாள், திணிதோளி எனவும், சுரி குழலாள், சுரிகுழலி எனவும், நெடுமார்பாள், நெடுமார்பி எனவும், தடங்கண்ணாள், தடங்கண்ணி எனவும் குழைக்காதாள். குழைக்காதி எனவும், குறுந் தாளாள், குறுந்தாளி எனவும் வரும்.

5. குணத்தால் வருபெயர் :-

பெயரியள் எனவும், புலமையள் எனவும், பொன்னொப்பாள் எனவும், கூனள், கூனி எனவும், கரியள் எனவும், மானுடத்தி எனவும், பார்ப்பினி எனவும், படைத்தலைவி எனவும், நல்லள் எனவும் வரும்.

6. தொழிலால் வருபெயர் :-
ஓதுவாள் எனவும், ஈவாள் எனவும், தச்சிச்சி எனவும் வரும்.

7. சுட்டால் வருபெயர் முதலானவை :-
அவள், இவள், உவள், எனவும், எவள், ஏவள், யாவள் எனவும், பிறள் எனவும், மற்றையாள் எனவும் வரும்.

8. தோழி முதலிய ஐந்துபெயரும் உரைக்கிடையிற் காண்க :-
இன்னன என்றதனால், பேதை பெதும்பை, இகுளை, மடந்தை, மாது, பாங்கி, பெண்டு, பெண்டாட்டி என உயர்திணைப் பெண்பால் குறித்து வருவன எல்லாம் கொள்க.

20