பெயரியல்

பெயர்ச்சொல்
உயர்திணைப் பலர்பால் பெயர்

 
278கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவுங்
கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி யாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
கிளந்த கிளை முதல் உற்ற ரவ்வீற்றவும் முன்னே சொல்லப்பட்ட சுற்றம் முதலாகிய அறுவகைப் பொருளையும் பொருந்திய ரகரமெய் ஈற்றுப் பெயர்களும், கள் என் ஈற்றின் ஏற்பவும் = கள் என்னும் விகுதியை ஈறாகவுடைய பெயர்களுள் இவ் இடத்துக்குப் பொருந்தி வருவனவும், பிறவும் = இவை போல்வன பிறவும், பல்போர் பெயரின் பகுதி ஆகும் - உயர்திணைப் பலர்பால் பெயர்களாம்.

' கள் ' விகுதி அஃறிணைப் பன்மைக்கும் வருதலால், ஏற்பவும் என்றார்.

(வரலாறு) தமர், நமர், நுமர், எமர், இருவர், மூவர் எனப் பொருளாதி ஆறனோடும் ஒட்டுக.

கோக்கள், மனுக்கள் என்றல் தொடக்கத்தன பகுதிப்பொருள் விகுதி ஈற்றுப் பெயர்கள்.

தமர்கள், நமர்கள் என்றல் தொடக்கத்தன விகுதிமேல் விகுதி ஈற்றுப் பெயர்கள்.

பிற என்றமையால் மாந்தர், மக்கள், மகார், சிறார், வேளிர் எனப் பலர்பாலைக் குறித்து வருவன எல்லாம் கொள்க.

21