மெய்யீற்றுப் புணரியல்

லகர ளகர வீறு

 
229குறில்செறி யாலள வல்வழி வந்த
தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்புந் திரிபு மாவன வுளபிற.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
குறில்செறியா லள - தனிக் குறில் ஒன்றனையும் சாராத லகார ளகார மெய்கள் , அல்வழி வந்த தகரந் திரிந்தபின் கேடும்- அல்வழிக்கண் வருமொழிக்கு முதலாய் வந்த தகரந் திரியும் இடத்துக் கெடுதலும் , ஈரிடத்தும் வருநத் திரிந்த பின் மாய்வும் = இரு வழிக்கண்ணும் வருமொழிக்கு முதலாய் வந்த நகரம் திரியும் இடத்துக்கெடுதலும் , வலி வரின் இயல்பும் திரிபும் ஆவன உள - வல்லெழுத்து முதல்மொழி வந்தால் அல்வழிக்கண் உறழாது இயல்பாதலும் திரிதலும் வேற்றுமைக்கண்ணே திரியாது இயல்பாதலும் பொருந்துவன உள .

ல ள க்கள் அல்வழியில் வல்லினம் வர உறழாது இயல்பாவது எழுவாய்த்தொடர் உம்மைத்தொகை விளித்தொடர் வினைமுற்றுத்தொடர் வினைத்தொகைகளிலும் திரிவது பண்புத்தொகை உவமைத்தொகை வினைசெச்சங்களிலும் எனக் கொள்க .

1 . வேல் + தீது = வேறீது , தோன்றல் + தீயன் = தோன்றறீயன் , வாள் + தீது = வாடீது ,வேள் + தீயன் = வேடீயன் என அல்வழியிலே தகரம் திரியுமிடத்துக் கெட்டன .

2. தோன்றல் + நல்லன் = தோன்றனல்லன் , வேள் + நல்லன் = வேணல்லன் எனவும் , தோன்றல் + நன்மை = தோன்றனன்மை , வேள் + நன்மை = வேணன்மை எனவும் இருவழியிலும் நகரம் திரியும் இடத்துக் கெட்டன .

3 . கால் கடிது , மரங்கள் கடிய எனவும் , கால்கை , பொருள் புகழ் எனவும் , தோன்றல் கூறாய் ,மக்காள் சொல்லீர் எனவும் , உண்பல் சிறியேன் , கேள் சாத்தா எனவும் , கால் சுடர் , அருள்குரு எனவும் அல்வழியிலே எழுவாய்த்தொடர் முதலியவற்றில் உறழாது இயல்பாயின .வேற்படைக் குமரன் , வாட்படைக் கையன் எனவும் , வேற்கண் , வாட்கண் எனவும் , வந்தாற் கொள்ளும் வந்தக்காற்கொள்ளும் எனவும் அல்வழியிலே பண்புத்தொகை முதலியவற்றில் உறழாது திரிந்தன .

4 . " கால்குதித் தோடிக் கடல்புக மண்டி , வாள்போழ்ந் தட்ட நீள்கழன் மறவர் " என வேற்றுமையிலே வலி வரத் திரியாது இயல்பாயின .

பிற என்ற மிகையால் , தோன்றறாள் , வேடோள் என , நிலைமொழி உயர்திணைப் பெயராயின் . வேற்றுமையிலும் தகரம் திரியும் இடத்துக் கெடுதலும் , காற்றுணை , தாட்டுணை எனவும் ,பிறங்கற்றோள் , வாட்டாரை எனவும் அல்வழியிலும் பண்புத்தொகை , உவமைத் தொகைகளில் கெடாமையும் கொள்க , இன்னும் ' பிற ' என்ற மிகையால் , தனிக் குறிலைச் சார்ந்த ல , ளக்களும் , விற்படை எனவும் விற்புருவம் எனவும் பண்புத்தொகை , உவமைத்தொகைகளில் உறழாது திரிதலும் , கொல்களிறு , கொள்பொருள் எனவும் , நில் கொற்றா , கொள் பூதா எனவும் வினைத்தொகை வினைமுற்றுத் தொடர்களில் இயல்பாதலும் கொள்க .

இது "லளவேற் றுமையிற் றடவும் " என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் .