பொதுப்பாயிரம்

2. ஆசிரியனது வரலாறு
நல்லாசிரியன் இலக்கணம்

 
26குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
அமைபவ னூலுரை யாசிரி யன்னே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை - உயர்குடிப் பிறப்பும் சீவகாருண்ணியமும் கடவுள் வழிபாடுமாகிய இவைகளால் எய்திய மேன்மையும் , கலை பயில் தெளிவு - பல நூல்களிலே பழகிய தேற்றமும் , கட்டுரை வன்மை - நூல் பொருளை மாணாக்கர் எளிதில் உணரும்படி தொடுத்துச் சொல்லும் வன்மையும் , நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும் - நிலத்தையும் மலையையும் துலாக்கோலையும் பூவையும் ஒத்த குணங்களும் , உலகு இயல் அறிவு - உலக நடையை அறியும் அறிவும் , உயர் குணம் இனையவும் அமைபவன் - உயர்வாகிய குணங்கள் இவை போல்வன பிறவும் நிறையப் பெற்றவன் , நூல் உரை ஆசிரியன் - நூல் கற்பிக்கும் ஆசிரியன் ஆவான் .