பொதுப்பாயிரம்

5. பாடம் கேட்டலின் வரலாறு

 
40கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்ன வார்வத் தனாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
கோடல் மரபு கூறுங்காலை - பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று - தகும் காலத்திலே போய் , வழிபடல் முனியான் - வழிபாடு செய்தலின் வெறுப்பு இல்லாதவனாகி , குணத்தோடு பழகி - ஆசிரியன் குணத்தோடு பொருந்தப் பயின்று , அவன் குறிப்பிற் சார்ந்து - அவன் குறிப்பின் வழியிலே சேர்ந்து , இரு என இருந்து - இரு என்று சொன்னபின் இருந்து , சொல் எனச் சொல்லி - படி என்று சொன்னபின் படித்து , பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி = பசித்து உண்பவனுக்கு உணவின் இடத்துள்ள ஆசை போலப் பாடங் கேட்டலில் ஆசையுடையவனாகி , சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி - சித்திரப் பாவையைப் போல அவ் அசைவுஅறு குணத்தினோடு அடங்கி , செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக-காதானது வாயாகவும் மனமானது கொள்ளும் இடமாகவும் , கேட்டவை கேட்டு - முன் கேட்கப்பட்டவற்றை மீண்டுங் கேட்டு , அவை விடாது உளத்து அமைத்து - அப்பொருள்களை மறந்துவிடாது உள்ளத்தின்கண் நிறைத்துக்கொண்டு , போ எனப் போதல் - போ என்ற பின் போகுதல் ஆகும் என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர் .