எழுத்தியல்

பிறப்பு
ஒற்றளபெடை

 
92ஙஞண நமன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
(இசை கெடின் - பாட்டில் ஓசை குறையின்); குறிலிணைக் (கீழ்) குறிற் கீழ் இடை கடை - குறில் இணையின் கீழும் குறிலின் கீழும் மொழிக்கு நடுவிலும் கடையிலும் நின்ற , ங ஞ ணந ம ன வ ய ல ள ஆய்தம் - ஙம் முதலிய இப்பத்தும் ஆய்தமும் ஆகிய பதினோரெழுத்தும் , அளபு ஆம் - அவ் ஓசையை நிறைக்கத் தத்தம் மாத்திரையின் மிக்கொலிக்கும் , அவற்றின் குறி வேறு மிகல் ஆம் - அப்படி அளபெடுத்தமையை அறிதற்கு அவற்றின் பின் அவ்வெழுத்துக்களே வரிவடிவில் வேறு அறிகுறியாய் வரும் .

முன் சூத்திரத்தில் ' இசைகெடின் ' என்றது இதற்குங் கூட்டப்பட்டது.

" இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்." எனவும்
" எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயா
னெங்ங் கெனத்திரிவா ரின்." எனவும்
" மடங்ங் கலந்த மனனே களத்து
விடங்ங் கலந்தானை வேண்டு." எனவும்
" அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து
நங்ங் களங்கறுப்பா நாம்." எனவும் வரும்.

இவற்றுள்;
' இலங்கு ' என்பதில் குறில் இணைக்கீழ் இடையிலும், ' எங்கு ' என்பதில் குறில்கீழ் இடையிலும் ஙகரம் அளபெடுத்தது. ' மடம் ' என்பதில் குறில் இணைக் கீழ்க் கடையிலும், 'அம்' என்பதில் குறில் கீழ்க் கடையிலும் மகரந் திரிந்த ஙகரம் அளபெடுத்தது.

" விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாத
ரிலஃஃகு முத்தி னினம்."
" எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்
வெஃஃகு வார்க்கில்லை வீடு".

இவற்றுள்,
'விலஃகி' என்பதில் குறில் இணைக்கீழ் இடையிலும், 'எஃகு' என்பதில் குறில்கீழ் இடையிலும் ஆய்தம் அளபெடுத்தது .

பதினோர் ஒற்றும் குறிலிணைக் கீழ் இடை குறில் கீழ் இடை குறில் இணைக் கீழ்க்கடை குறில் கீழ்க்கடை என்னும் நான்கு இடத்தும் அளபெடுக்கும் எனவே ஒற்றளபெடை நாற்பத்து நான்காதல் பெறப்படும் , ஆய்தம் ஙகரம் போல விதி ஈறாகவும் வாராமையால் அதற்குக் குறில் இணைக் கீழ்க்கடை குறில் கீழ்க்கடை என்னும் இரண்டு இடத்தைக் கழிக்க , ஒற்றளபெடை நாற்பத்திரண்டாதல் காண்க.