மெய்யீற்றுப் புணரியல்

ணகர னகர வீறு

 
211சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி
இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற
டவ்வா கலுமா மல்வழி யும்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சாதிப் (பெயர்) = சாதி பற்றி வரும் பெயர்களுக்கும் , குழூஉப் (பெயர்) = திரள் பற்றி வரும் பெயர்களுக்கும் , பரண் கவண் பெயர் - பரண் , கவண் என்னும் பெயர்களுக்கும் , இறுதி - ஈற்று ணகரம் , வேற்றுமைக்(கும்) இயல்பு ஆம் - வேற்றுமைகண்ணும் வல்லினம் வரின் இயல்பாகும் , உணவு எண் (பெயர்) - உணவுக்குரிய எள்ளின் திரிசொல்லாகிய எண் என்னும் பெயருக்கும் , சாண் (பெயர்) = சாணென்னும் நீட்டல் அளவைப் பெயருக்கும் , (இறுதி) = ஈற்று ணகரம் , அல்வழியும் டவ்வாகலும் ஆம் - அவ்வழிகண்ணும் வல்லினம் வரின் திரிந்து டகர மாதலும் பொருந்தும் .

1. பாண்குடி , உமண்குடி எனவும் ,
அமண்குடி எனவும் ,
பரண்கால் எனவும்,
கவண்கல் எனவும் வேற்றுமையிலும் இயல்பாயிற்று . [பாண் - பாடுதல் தொழிலுடையதொரு சாதி . உமண் - உப்பமைத்தல் தொழிலுடைய தொரு சாதி . அமண் -அருகனை வழிபடுவதொரு கூட்டம் . ]

2. எண் + கடிது = எட்கடிது , சாண் + கோல் = சாட்கோல் என அவ்வழியிலும் திரிந்தது . டவ்வாகலுமாம் என்ற உம்மையால் , எண்கடிது , சாண்கோல் என இயல்பாதலே சிறப்பாம் . பிற என்ற மிகையால் வேற்றுமையில் , பாணக்குடி என அகரச் சாரியை பெறுதலும் , அட்டூண்டுழனி என்னும் இயல்பும் , மட்குடம் , மண்குடம் என்னும் உறழ்வும் , இரு வழியிலும் இன்னும் ணகர ஈற்றுள் அடங்காதவை உண்டேல் அவையும் கொள்க .

இயல்பாம் வேற்றுமைக்கு என்றது . " ணனவல்லினம் வரட் டறவும் " என எய்தியது விலக்கல் , ' டவ்வாகலுமாம் அல்வழியும் ' என்றது அல்வழிக்கு அனைத்துமெய் வரினும் இயல்பாகும் என எய்தியதன்மேல் சிறப்பு விதி.