எழுத்தியல்

3. முறை

 
73சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்த றானே முறையா கும்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சிறப்பினும் இனத்தினும் செறிந்து - சிறப்பினாலும் இனத்தினாலும் பொருந்தி , ஈண்டு அம் முதல் நடத்தல் தானே - இவ் உலகத்தில் அகரம் முதலாக வழங்குதலே , முறை ஆகும் - எழுத்துக்களது முறையாம் .

தனித்து இயங்கும் வன்மை உடைய உயிர் எழுத்துக்கள் அவ்வன்மை இல்லாத மெய் எழுத்துக்களுக்கு முன் நிற்பதும் குறிலினது விகாரமே நெடில் ஆதலால் குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களுக்கு முன் நிற்பதும் , வலியவர் மெலியவருக்கு முன் நிற்றல் போல வல்லெழுத்துக்கள் மெல்லெழுத்துக்களுக்கு முன் நிற்பதும் சிறப்பினால் எனவும், குற்றெழுத்துக்களுக்குப் பின் அவ் அவற்றிற்கு இனம் ஒத்த நெட்டெழுத்துக்கள் நிற்பதும் வல்லெழுத்துக்களுக்குப் பின் அவ் அவற்றிற்கு இனமொத்த மெல்லெழுத்துக்கள் நிற்பதும் இனத்தினால் எனவும் கொள்க .