இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்- அறிவுடையோராலே நியமிக்கப்பட்ட இலக்கியத்தைப் பார்த்து அவ் இலக்கியத்தின் அமைதியே இலக்கணமாகச் சொல்லுதலால், பகுதி விகுதி பகுத்து- முன் சொல்லப்பட்ட பகுதியையும் பிரித்து , இடை நின்றதை வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனல் - நடுநின்றதை வினையாலணையும் பெயர்களுக்கு இடைநிலை என்று சொல்லுக. அறிஞன், வினைஞன், கவிஞன், என்பன ஞகர இடைநிலை பெற்றன. ஓதுவான், பாடுவான் என்பன வகர இடைநிலை பெற்றன. இடைச்சி, வலைச்சி, புலைச்சி என்பன சகர இடைநிலை பெற்றன. வண்ணாத்தி, பாணத்தி, மலையாட்டி, வெள்ளாட்டி என்பன தகர இடைநிலை பெற்றன. செட்டிச்சி, தச்சிச்சி என்பன இச் இடைநிலை பெற்றன.
|