இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் அல்லா அச்சு - ஆரியமொழியுள் அச் சென்று வழங்கும் உயிர் பதினாறனுள்ளும் , இடையில் நின்ற நான்கும் ஈற்றில் நின்ற இரண்டும் ஒழிந்து நின்ற அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ - ஐ, ஓ, ஒள என்னும் பத்தும் , ஐ வருக்க முதல் ஈறு - அல்லென்று வழங்கும் மெய் முப்பத்தேழுள்ளும் க, ச, ட, த, ப என்னும் ஐந்து வருக்கங்களின் முதலில் நின்ற க, ச, ட, த, ப என்னும் ஐந்தும் , ஈற்றில் நின்ற ங, ஞ, ண, ந, ம என்னும் ஐந்தும் , ய ஆதி நான்மை - ய, ர, ல, வ என்னும் நான்கும்; ள ஆகும் ஐயைம் பொது எழுத்து - ளவ்வும் ஆகிய இருபத்தைந்து எழுத்துக்களும் , ஒழிந்த நாலேழும் திரியும் - இவையன்றி மேலே உயிருள் ஒழிந்த ஆறும் ஐந்து வருக்கங்களினும் இடைகளில் ஒழிந்த பதினைந்தும் முப்பதாம் மெய் முதலிய எட்டனுள் ளகரம் ஒழிந்த ஏழுமாகிய இருபத்தெட்டும் ஆரியத்திற்குச் சிறப்பெழுத்துக்களாய்த் தமிழிலே தமக்கேற்ற பொது எழுத்துக்களாய்த் திரிந்து வரும். சிறப்பெழுத்துத் திரியுமென வரையறை கூறவே, பொதுவெழுத்து இயல்பாயும் தமக்கேற்ற விகாரமாயும் வருமென்பதும் கூறினார் ஆயிற்று. ஆரியத்துள் உயிரை அச்சு, சுரம் எனவும், மெய்யை அல், வியஞ்சனம் எனவும் கூறுவர். ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப்படும். அமலம் , கமலம் , காரணம் , குங்குமம். இவை பொது எழுத்தாலாகிய தற்சம மொழி. ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்தாலும் பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகித் திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்பவம் எனப்படும். சுகி, போகி, சுத்தி. இவை சிறப்பெழுத்தாலாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி. அரன், செபம் , ஞானம், அரி. இவை பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி .
|