உயிரீற்றுப் புணரியல்

உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி

உயிர் முன் உயிர் புணர்தல்

 
162இ ஈ ஐவழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இ ஈ ஐ வழி யவ்வும் - இகர ஈகார ஐகாரங்களின் முன்னே யகரமும் , ஏனை உயிர் வழி வவ்வும் - ஆ , ஆ , உ , ஊ , ஒ ,ஓ ,ஒள என்னும் இவ் ஏழுயிர்களின் முன்னே வகரமும் , ஏ முன் இவ் இருமையும் - ஏகாரத்தின் முன்னே யகரமும் வகரமும் , உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும் - உயிர் முதன் மொழி வரின் உடம்படுமெய் என்று வரப்பெறும் .

உடம்படுமெய் என்பது , நிலைமொழி ஈற்றினும் , வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய் .

உடம்படுத்தல் எனினும் உடன்படுத்தல் எனினும் ஒக்கும் .

வரும் உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய் எனினும் பொருந்தும் .

1 . மணி , தீ , பனை இவற்றின் முன் , அழகிது , அழகு முதலிய உயிர் முதன் மொழிகளை வருவித்து , மணியழகிது , மணி யழகு எனக் கூட்டி , இ , ஈ, ஐ ம் முன் இரு வழியும் யகரம் பெறுதல் காண்க .

உடம்படுமெய்யின் மேல் வருமொழி முதலுயிர் ஏறுதல் , " உடன்மே லுயிர் " ( சூ . 204 ) என்னும் சூத்திரத்தால் பெறப்படும் .

2 . விள , பலா , கடு , பூ , நொ , கோ , கௌ இவற்றிற்கு முன் , அழகிது , அழகு முதலிய உயிர் முதன் மொழிகளை வருவித்து , விள வழகிது , விள வழகு எனக் கூட்டி , மற்றை . உயிர்களின் முன் , இரு வழியும் வகரம் பெறுதல் காண்க .

3.அவனே + அழகன் = அவனே யழகன் என இடைச் சொல்லாகிய ஏ முன் யகரமும் , ஏ + எலாம் = ஏவெலாம் , சே + உழுதது = சேவுழுதது என ஒரெழுத்தொருமொழியாகிய உயிர் , உயிர்மெய் என்னும் ஏமுன் வகரமும் , சே + அடி = சேயடி , சேவடி எனச் செம்மை என்னும் பண்புப் பெயரின் விகாரமாகிய சே முன் யகரமும் வகரமும் பெறுதல் காண்க .