இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் - இயல்பினாலும் விதியினாலும் இறுதியாக நின்ற உயிர்களின் முன் , க ச த ப மன் மிகும் - வருங் க , ச , த , பக்கள் பெரும்பாலும் மிகும் . விதவாதன - பின் சிறப்பு விதியில் சொல்லாதவைகளுள் . 1. ஆடூஉக் குறியன் , நம்பிக் கொற்றன் எனவும் ஆடூஉக் கை , செட்டித் தெரு எனவும் உயர்திணைப் பெயர் முன் இருவழியும் வல்லெழுத்து மிக்கன , சாத்திப்பெண் எனப் பொதுப்பெயர் முன் அல் வழியில் வல்லெழுத்து மிக்கது . விளக்குறிது , தாராக் கடிது , தீப் பெரிது , வடுத்தீது , கொக்குக் கடிது , கொண்மூக் கரிது , சேச் சிறிது , சோப்பெரிது எனவும் . ஒற்றைக் கை , வட்டக் கல் , தாழக் கோல் எனவும் அஃறிணைப்பெயர் முன் அல்வழியில் வல்லெழுத்து மிக்கன . இவற்றுள் , ஒற்றை , வட்ட , தாழ என்பன விதி ஈறு . விளக்கோடு , பாலாக்காய் , கிளிச்சிறை , தீக்கடுமை , கடுக்காய் , கொக்குக் கால் , வண்டுக் கால் , கொண் மூக்குழாம் , சேக்கொம்பு , தினைத் தாள் , சோப்பெருமை என அஃறிணைப் பெயர் முன் வேற்றுமையில் வல்லெழுத்து மிக்கன . 2. ஆடிக் கொண்டான் , ஆடாக் கொண்டான் , ஆடூஉக்கொண்டான் , ஆடெனக் கொண்டான் , ஆடக் கொண்டான் . உண்பாக்குச் சென்றான், பூத்துக் காய்த்தது , பொள்ளெனப் பரந்தது , சாலப் பகைத்தது எனவும் , இருளின்றிக் கண்டார் , பொருளன்றிக் காணார் எனவும் , தெரிநிலை வினையெச்சத்தின் முன்னும் குறிப்பு வினையெச்சத்தின் முன்னும் வல்லெழுத்து மிக்கன . கூவிற்றுக் கோழி எனவும் , குண்டுகட்டுக் களிறு எனவும் தெரிநிலை வினைமுற்றின் முன்னும் குறிப்பு வினைமுற்றின் முன்னும் வல்லெழுத்து மிக்கன . 3 . ஆங்கக் கொண்டான் , இனிச் செய்வேன் , மற்றைத் தெரு என இடைச் சொல்லின் முன் வல்லெழுத்து மிக்கன . 4 . தவப்பெரியன் , கடிக்கமலம் , பணைத்தோள் என உரிச்சொல்லின் முன் வல்லெழுத்துமிக்கன . 5. சொன்றிக் குழிசி எனத் திசைச்சொல் முன்னும் , கங்கைச் சடை என வடசொல் முன்னும் வல்லெழுத்து மிக்கன . விதவாதன பெரும்பாலும் மிகும் எனவே , விதந்தன சிறபான்மை மிகும் எனவும் , விதவாதன சிறுபான்மை மிகா எனவும் கூறினாராயிற்று. அவை வருமாறு :- 1. நொக்கொற்றா , துக்கொற்றா , சாத்தா , தேவா , பூதா என்பன " ஏவல்முன் வல்லிம் இயல்பொடு விகற்பே " (சூ. 161 ) என முற் கூறிய சிறப்புவிதி பெறாது , வல்லெழுத்து மிக்கே வந்தன . எனவே , நொ , து முன் மூவினமும் மிகும் என்றாராயிற்று . 2. ஏரிகரை , குழவி கை , குழந்தை கை , " பழமுதிர் சோலை மலைகிழவோனே " எனவும் , கூப்புகரம் , ஈட்டுதனம் , நாட்டுபுகழ் எனவும் , முறையே வேற்றுமையிலும் அல்வழியிலும் பின் விதவாதன மிகாவாயின . வல்லினம் உயிரீற் றுயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களுக்கு முன் மிகும் என்றது " ஆவி யரமுன் வன்மை மிகா "( சூ . 159 ) என எய்தியதன்மேல் சிறப்புவிதி ; அஃறிணைப் பெயர்களுக்கு முன்னும் வினை முதலியவைகளுக்கு முன்னும் மிகும் என்றது எய்தாதது எய்துவித்தல் .
|