உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
182இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இடைத்தொடர் (முன்) = இடைத்தொடர் முன்னும் , ஆய்தத்தொடர் (முன்) = ஆய்தத்தொடர் முன்னும் , ஒற்று இடையின் மிகா நெடில்(தொடர் முன்)- ஒற்று இடையே மிகாத நெடில்தொடர் முன்னும் , ஒற்று இடையின் மிகா உயிர்த்தொடர் முன் - ஒற்று இடையே மிகாத உயிர்த்தொடர் முன்னும் , வேற்றுமை மிகா = வரும் வல்லினம் வேற்றுமையில் இயல்பாம்.

1. தெள்கு கால், சிறை, தலை, புறம் என இடைத்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வலி இயல்பாயின.

2. எஃகு கடுமை, சிறுமை, தீமை, பெருமை என ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் இயல்பாயின.

3. நாகு கால், செவி, தலை புறம் என ஒற்றிடையே மிகாத நெடில்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் இயல்பாயின.

4. வரகு கதிர், சோறு, தாள், பதர் என ஒற்று இடையே மிகாத உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் இயல்பாயின.

ஒற்றிடையே மிகும் நெடில்தொடர் உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் வரும் சூத்திரத்தால் கூறப்படும்; அவற்றின்முன் வரும் வல்லினம் மிகும்.

இதுவும் 'இயல்பினும் விதியினும்' என்னும் சூத்திரத்தால் எய்தியது ஒருவழி விலக்குதல்.