இன்மை இல் என் சொற்கு - இன்மைப் பண்பை உணர்த்தி நிற்கும் இல் என்னும் சொல்லுக்கு , ஐ அடைய வன்மை விகற்பமும் - ஐகாரச் சாரியை பொருந்த அவ்விடத்து வரும் வல்லினம் விகற்பித்தலும் , ஆகாரத்தொடு வன்மை ஆகலும் - ஆகாரச் சாரியை பொருந்த அவ்விடத்து வரும் வல்லினம் மிகலும் , இயல்பும் ஆகும் - இவ்விரு விதியும் பெறாது இயல்பாதலும் பொருந்தும் . சாரியை பெறுதற்கு வரும் எழுத்தைச் சொல்லாமையால் நாற்கணமும் கொள்க . இல்லைப்பொருள் ,இல்லைபொருள் , இல்லாப்பொருள் , இல்பொருள் , ஞானம் , வன்மை , அணி என வரும் . இல் என்னும் பண்புச்சொல் ஐகார ஆகாரச் சாரியைகள் பெறும் என்றதும் , இயல்பாம் என்றதும் "லளவேற்றுமையிற் றடவு மல்வழி யவற்றோ டுறழ்வும்" (சூ. 227) என எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் , ஐகாரச் சாரியைமுன் வல்லினம் விகற்பமாம் என்றது " அல்வழி இஐம் முன்னராயின் " என்னும் சூத்திரத்தால் எய்தியது இகந்துபடாமைத் காத்தல் , ஆகாரச் சாரியை முன் வல்லினம் மிகும் என்றது " இயல்பினும் விதியினும் " (சூ.165) என்னும் சூத்திரத்தால் எய்தியது இகந்துபடாமைக் காத்தல்.
|