இடை உரி வடசொலின் இயம்பியகொளாதவும்-இடைச்சொற்களுள்ளும் உரிச்சொற்களுள்ளும் வட சொற்களுள்ளும் உயிரீறும் ஒற்றீறுமான புணரியலிலே தோன்றல் திரிதல் கெடுதல் இயல்பாதல் எனச்சொல்லிய புணர்ச்சி இலக்கணங்கள் பொருந்தாது வேறுபட்டு வருவனவும் , போலியும்-இலக்கணப்போலி மொழிகளும் , மரூஉவும் = மரூஉ மொழிகளும் , பொருந்திய ஆற்றிற்கு இயையப் புணர்தல் = இரு வகை வழக்கிலும் நடக்கும் முறைமைக்குப் பொருந்துமாறு புணர்க்கை, யாவர்க்கும் நெறி - அறிவுடையோர் எல்லார்க்கும் முறை . 1. "மடவை மன்ற தடவு நிலைக்கொன்றை" என அகர ஈற்று இடைச்சொல் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாயிற்று. ஆன்கன்று, மான்கன்று, வண்டின்கால், தேரின் செலவு, யாழின்புறம் என வேற்றுமைப் புணர்ச்சிக்கண் னகர ஈற்றுச்சாரியை இடைச்சொற்கள் திரியாது இயல்பாயின. 2. மழகளிறு, உறுபுனல் எனவும் கமஞ்சூல் , தடஞ் செவி, தடந்தோள், கயந்தலை எனவும் உயிர் ஈற்று உரிச்சொல் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாயும் மெல்லெழுத்து மிகுந்தும் வந்தன. 3. அளிகுலம், தனதடம், ஆதிபகவன் என உயிர் ஈற்று வடசொல் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாயின . 4. இல்+முன் = முன்றில், பொது+இல் = பொதியில் எனவரும் இலக்கணப்போலி மொழிகளும் , அருமருந்தன்ன பிள்ளை - அருமந்த பிள்ளை; குணக்குள்ளது = குணாது , தெற்குள்ளது தெனாது , வடக்குள்ளது = வடாது , சோழ னாடு = சோணாடு , பாண்டியநாடு = பாண்டி நாடு , மலையமானாடு = மலாடு, தொண்டை மானாடு = தொண்டை நாடு , தஞ்சாவூர் = தஞ்சை; ஆற்றூர் = ஆறை , ஆதன்தந்தை = ஆந்தை , பூதன்தந்தை = பூந்தை , வடுகன் தந்தை = வடுகந்தை என வரும் மரூஉ மொழிகளும் நிலைமெழி வருமொழிகளுள் ஏற்கும் செய்கை அறிந்து முடித்துக்கொள்க மற்றவை களும் இப்படியே. வடமொழித் தொகைப் பதங்கள், தமிழில் ஆங்காங்கு வருமிடத்துப் பெரும்பாலும் அவ்வடநூல் புணர்ச்சியே பெறும். புணர்ச்சி எனினும் சந்தி எனினும் ஒக்கும். அச்சந்தி, தீர்க்கசந்தி, குணசந்தி விருத்திசந்தி என மூவகைப்படும் . (1) தீர்க்கசந்தி1. அ, ஆ வின் முன் அ, ஆ வரின், ஈறும் முதலுங் கெட, ஆ வொன்று தோன்றும் :- பத+அம்புயம் = பதாம்புயம் சிவ+ஆலயம் = சிவாலயம் சேநா+ அதிபதி = சேநாதிபதி சதா+ ஆநந்தம் = சதாநந்தம் 2. இ, ஈயின் முன் இ, ஈ வரின், ஈறும் முதலும் கெட, ஈ ஒன்று தோன்றும் : - கிரி+இந்திரன் = கிரீந்திரன் கிரி+ஈசன் = கிரீசன் மகீ+இந்திரன் = மகீந்திரன் நதீ+ஈசன் = நதீசன் 3. உ, ஊ வின் முன் உ, ஊ வரின், ஈறும் முதலும் கெட, ஊ ஒன்று தோன்றும் : - குரு+உபதேசம் = குரூபதேசம் மேரு+ஊர்த்துவம் = மேரூர்த்துவம் வதூ+உத்துவாகம் = வதூத்துவாகம் வதூ+ ஊரு = வதூரு (2) குணசந்தி1. அ, ஆ முன் இ, ஈ வரின், ஈறும் முதலும் கெட, ஏ ஒன்று தோன்றும் :- நர+இந்திரன் = நரேந்திரன் சுர+ஈசன் = சுரேசன் தரா+இந்திரன் = தரேந்திரன் மகா+ஈசன் = மகேசன் 2. அ, ஆ வின் முன் உ, ஊ வரின், ஈறும் முதலும் கெட, ஒ ஒன்று தோன்றும் : - பாத+உதகம் = பாதோதகம் ஞான+ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன் கங்கா+உற்பத்தி = கங்கோற்பத்தி தயா+ஊர்ச்சிதன் = தயோர்ச்சிதன் (3) விருத்திசந்தி1. அ, ஆ வின் முன் ஏ, ஐ வரின், ஈறும் முதலும் கெட, ஐ ஒன்று தோன்றும் : - லோக+ஏகநாயகன் = லோகைகநாயகன் சிவ+ஐக்கியம் = சிவைக்கியம் தரா+ஏகவீரன் = தரைகவீரன் மகா+ஐசுவரியம் = மகைசுவரியம் 2. அ, ஆ வின் முன் ஓ, ஒள வரின், ஈறும் முதலும் கெட, ஒள ஒன்று தோன்றும். கலச+ஓதனம் = கலசௌதனம் திவ்விய+ஒளடதம் = திவ்வியௌடதம் கங்கா+ ஒகம் = கங்கௌகம் மகா+ஒளதாரியம் = மகௌதாரியம் மெய்யீற்றுப் புணரியல் முற்றிற்று .
|