இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின் - விகுதி முதலிய புணர்ச்சிக்கண் இதற்கு இது சாரியை என்று அளவு செய்து விதித்தனவற்றுள்ளும் ஒழிந்தனவற்றுள்ளும் தனித்தனி சொல்லப்புகின் அளவு படாமையால் , விகுதியும் பதமும் உருபும் பகுத்து = விகுதிப் புணர்ச்சியையும் பதப் புணர்ச்சியையும் , உருபு புணர்ச்சியையும் கண்ட இடத்துப் பகுத்து , இடை நின்ற எழுத்தும் பதமும் = நடுவே நின்ற ஏகாரம் அகரம் முதலிய எழுத்துச் சாரியையினையும் , அன் , ஆன் முதலிய பதச் சாரியையினையும் , இயற்கையும் = இவ்விரண்டு சாரியையும் தோன்றாத இயல்பினையும் , ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி = தெரிய அறிவித்தல் பெரியோரது கடனாகும் . 1 . " ஆன நெய் தெளித்து நான நீவி " என விதித்த பொருள் புணர்ச்சிக்கண் , " உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும் " என்ற மாட்டேற்றால் அமைந்த னகர மெய்ச் சாரியை அன்றி , அகரச் சாரியையும் உடன் வந்தது . 2 . இனி விதியாது ஒழிந்தவற்றின்கண் , பாட்டின் பொருள் எனக் குற்றியலுகரத்திற்கு இன் சாரியை வந்தது . 3. தன் கை, என் கை எனச் சாரியை இன்றி இயல்பாக வந்தன . இப்படியே மூவகைப் புணர்ச்சிகளையும் பகுத்து உணர்ந்து கொள்க .
|