உருபு புணரியல்

புறனடை

வேற்றுமைப் புணர்ச்சிக்குப் புறனடை

 
255இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும்
உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன பிறவு மாகுமை யுருபே
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும் = வேற்றுமைப் புணர்ச்சிக்கு விதித்த பொது விதியோடு தானும் ஒருங்கு முடிதலே அன்றி அப்படி விதித்த இயல்பிலே விகாரமாகியும் விகாரத்திலே இயல்பாகியும் , உயர்திணையிடத்து விரிந்துந் தொக்கும் = உயர்திணைப் பெயரிடத்து வெளிப்பட்டும் மறைந்தும் ; விரவுப் பெயரின் விரிந்தும் நின்றும் = பொதுப் பெயரிடத்து வெளிப்பட்டும் மறைந்தும் , அன்ன பிறவும் ஆகும் - அவை போல்வன பிற வேறுபாடுகளாகியும் வரும் , ஐ யுருபு - இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி .

1. வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப எனவும் மகட் கொடுத்தான் , தலைவற்புகழ்ந்தான் , தாய்க்கொலை , ஒன்னலர்ச் செகுத்தான் , எனவும் இயல்பாக வேண்டிய இடத்து விகாரமாயிற்று .

2. கனி தின்றான் , வரை பிளந்தான் , பந்து தந்தான் எனவும் , மண் சுமந்தான் , பொன் கொடுத்தான் எனவும் , காய் தின்றான் , தேர் செய்தான் , தமிழ் படித்தான் எனவும் , பால் குடித்தான், வாள் பிடித்தான் எனவும் , வரம் பெற்றான் , செய முற்றான் , மரம் வெட்டினான் எனவும் விகாரமாக வேண்டிய இடத்து இயல்பாயிற்று . இவ்விகாரத்து இயல்பு வருமொழி வினையாய இடத்தெனக் கொள்க .

வருமொழி வினையாகாது பெயரேயாக இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க தொகையிலே வேற்றுமைக்கென விதித்த பொதுவிதியோடு ஒருங்கொத்து விகாரத்தில் விகாரமாகும் . மண்கூடை , புண்கை என ணகர ஈறு இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க தொகையிலும் இயல்பாம் . மண்சுமந்தான் என்பது , மண்ணைச் சுமந்தான் என விரிதலால் இரண்டனுருபு மாத்திரம் தொக்க தொகை, மண்கூடை என்பது , மண்ணையுடைய கூடை என விரிதலால் , உருபும்பயனும் உடன்தொக்க தொகை. கற்கறித்தான் , கட்குடத்தான் எனத்தனிக் குறிலைச் சார்ந்த லகர ளகரம் வருமொழி வினையாய இடத்தும் , வேற்றுமைப் பொதுவிதி ஏற்றல் காண்க .

3. நம்பியைக் கொணர்ந்தான் , அரசனை வணங்கினான் என உயர்திணைப் பெயரிடத்தே விரிந்தது . ஆடூஉ வறிசொல் , மகடூஉ வறிசொல் , பல்லோரறியுஞ்சொல் , நான்முகற் றொழுது என உயர்திணைப் பெயரிடத்தே தொக்கது .

4. கொற்றனைக் கொணர்ந்தான் எனப் பொதுப் பெயரிடத்தே விரிந்த்து . ஆண் பெற்றாள் , பெண் பெற்றாள் எனப் பொதுப்பெயரிடத்தே தொக்கது .

அன்ன பிறவும் என்றதனால் , தற்கொண்டான் எற்பணியாள் என உறழ வேண்டிய இடத்துத் திரிந்தே வருதலும் , விளக்குறைத்தான் என இன மெல்லெழுத்து மிகவேண்டிய இடத்து வல்லெழுத்து மிகுதலும் , மரங் குறைத்தான் என மவ்வீறு கெட்டு வல்லெழுத்து மிக வேண்டிய விடத்து மகரம் இன மெல்லெழுத்தாகத் திரிதலும் , மாடு கொண்டான் , பயறு தின்றான் என ட,ற ஒற்றிரட்ட வேண்டிய இடத்து இரட்டாமையும் , மருந்து தின்றான் என மென்றொடர் வன்றொடராக வேண்டிய இடத்து அங்ஙனம் ஆகாமையும் வேறொட்டான் , தாடொழுதான் என லகர ளகரத் தகரம் வரத்திரிய வேண்டிய விடத்துக் கெடுதலும் , குரிசிற்றடிந்தான் , அவட்டொடர்ந்தான் என உயர்திணைக்கண் கெடாது திரிந்து நிற்றலும் , பிறவும் கொள்க .

இன்னும் , எண்ணின்கண் நின்ற இறந்தது தழீஇய இழிவு சிறப்பும்மைகளால் , வேற்றுமைக்கென விதித்த பொது விதியோடு ஒருங்கு ஒத்து , தெள்கு பிடித்தான் , எஃகு தொடுத்தான் , நாகு கட்டினான் , வரகு தந்தான் என இயல்பில் இயல்பாகியும் , மகப் பெற்றான் , பலாக் குறைத்தான் , வடுப பெற்றான் , சுக்குத் தின்றான் , பூத் தொடுத்தான் , சேப் பெற்றான் கோக்கறந்தான் என வருமொழி வினையாய விடத்தும் விகாரத்தில் விகாரமாகியும் வருதலே பெரும்பாலன என்க .