உருபு புணரியல்

புறனடை

எழுத்ததிகாரத்துக்குப் புறனடை

 
257இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும்
விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான்
வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இதற்கு இது முடிபு என்று - இதற்கு இது ழுடிபு என்று , யாவும் எஞ்சாது விதிப்ப - இவ்வதிகாரத்துள் விதிக்கத் தகுவனவற்றை எல்லாம் குறையாமல் தனித்தனி அளவு செய்து விதிக்கப் புகின் , அளவு இன்மையின = அதற்கு ஒர் அளவில்லாமையால் , விதித்தவற்று இயலான் - வகுத்து விதித்தவற்றினுடைய இலக்கணங்களை ஏதுவாகக் கொண்டு , வகுத்து உரையாதவும் வகுத்தனர் கொளல் = வகுத்து விதி உரையாதனவற்றையும் கருதல் அளவையால் வகுத்து விதியுரைத்துக் கொள்க .

விதிப்ப எனற்பாலது அகரங் குறைந்து நின்றது .

1. எழுத்தியலுள் ," மொழிமுதற் காரண மாமணுத்திரளொலி யெழுத்து " என உரைத்தமையால், கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும் சட்டகம் போலச் செவிப்புல ஒலியை உட்கொளற்கு இடும் உருபாம்வடிவு எழுத்தே எனப் பிறர் கூறியவாறு இவ்வொலிவடிவைக் காட்டுதற்கு ஒர் கருவியாக எழுதிக்கொள்ளபட்டது வரிவடிவு எழுத்தெனச் கொள்க.

2. பதவியலுள் , " அன் , ஆன் , அள் , ஆள் " என்னும் சூத்திரத்திலே முறையே அன் , ஆன் விகுதி ஆண்பாற்கு என உரைத்தமையால் , பெருமாள் என்னும் பதம் பெருமையை உடையானென்னும் பொருள் தோன்ற நின்ற பெருமான் என்னும் பதத்தினது ஆன் விகுதி ஆள் விகுதியாக ஒரோ இடத்தே திரிந்து ஆண் பாலையே உணர்த்தி நின்றது எனக்கொள்க .

3. உயிரீற்றுப்புணரியலுள் , " இயல்பினும் விதியினும் நின்ற வுயிர்முன் கசதப மிகும் " என்று சொன்னமையால் , " ணனவல் லினம்வரட் டறவும் " என்று இடத்து டகரமும் வல்லினம் ஆதலின் மிகுந்தது எனக்கொள்க.

4. மெய்யீற்றுப் புணரியலுள் " நும் தம் எம் நம் மீறா மவ்வரு ஞநவே " என உரைத்தமையால் , அம் என்னும் சொல் இறுதி மகரமும் குற்றொற்று ஆதலின் தன்னொடு மயங்காத மெல்லினம் வரின் அதுவாய்த் திரிந்து அந்நலம் என அழகினது நலம் என்னும் பொருளதாய் வரும் எனக் கொள்க.

5. உருபு புணரியலுள் , " வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே " என உரைத்தமையால் , அது போலும் வினாவும் எவற்றை என அற்றுச் சாரியை பெறுமெனவும் , இரண்டாம் வேற்றுமைக்கும் மூன்றாம் வேற்றுமைக்கும் புறனடை உரைத்தமையால் , ஏழாம் வேற்றுமையும் " வரைபாய் வருடை" , " மண்புகுந்தும் விண் பறந்து மாலுமயனுங் காணா வொருபொருள் " என வேற்றுமைப் பொதுவிதி ஏலாது சிறுபான்மை வரும் எனவும் கொள்க .

இன்னும், இவ் ஐந்து இயலுள்ளும் வகுத்துரையாத வற்றை எல்லாம் துன்பப்படாது இதுவே இடமாக முடித்துக் கொள்க

18

உருபு புணரியல் முற்றிற்று.

எழுத்ததிகாரம் முற்றுப்பெற்றது .