பெயரியல்

சொல்லின் பொது இலக்கணம்
வழக்கு இன்னது என்பது

 
267இலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉவென் றாகு மூவகை யியல்பும்
இடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இலக்கணமுடையது இலக்கணப்போலி மரூஉ என்று ஆகும் மூவகை இயல்பும் = இலக்கணமுடையது என்றும் இலக்கணப்போலி என்றும் மரூஉ என்றும் வழங்கும் மூவகை இயல்பு வழக்கும் , இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனும் முத்தகுதியோடு = இடக்கர் அடக்கல் என்றும் மங்கலம் என்றும் குழூஉக்குறி என்றும் வழங்கும் மூன்று தகுதி வழக்குடனே கூட , ஆறு ஆம் வழக்கு இயல் - அறுவகைப்படும் வழக்கு இலக்கணம் .

1. இயல்பு வழக்கு

இலக்கணம் உடையது என்பது இலக்கணநெறியால் வருவது . இலக்கணப்போலி என்பது , இலக்கணம் இல்லையாயினும் , இலக்கணம் உடையது போல் அடிப்பட்ட சான்றோராலே தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருவது . மரூஉ என்பது , தொன்றுதொட்டு வருதல் இன்றி , இடையிலே , சில எழுத்துக் கெட்டும் , சில எழுத்துத் திரிந்தும், சில எழுத்துத் தோன்றியும் , இலக்கணத்தில் சிதைந்து , தானே மருவி வழங்குவது. இம்மூன்றும் , எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லால் கூறதலால் , இயல்பு வழக்கு எனப்பட்டன .

1. நிலம் , நீர் , தீ , காற்று , வானம் , நன்னிலம் , தண்ணீர் , வெந்நீர் இவை முதலானவை இலக்கணம் உடையன .

2. இல்முன் என்பதை முன்றில் என்றும் , நகர்ப்புறம் என்பதைப் புறநகர் என்றும் , புறவுலா என்பதை உலாப்புறம் என்றும் , கண்மீ என்பதை மீகண் என்றும் , கோவில் என்பதைக் கோயில் என்றும் , பொதுவில் என்பதைப் பொதுயில் என்றும் , வழங்கும் இவை முதலானவை இலக்கணப் போலி .

3. அருமருந்தன்னபிள்ளை என்பதை அருமந்த பிள்ளை என்றும் , மலைமானாடு என்பதை மலாடு என்றும் , சோழநாடு என்பதைச் சோனாடு என்றும் , பாண்டியனாடு என்பதைப் பாண்டிநாடு என்றும் , தொண்டை மானாடு என்பதைத் தொண்டைநாடு என்றும், அ இ என்னும் சுட்டுக்களை அந்த இந்த என்றும் மரவடி என்பதை மராடி என்றும் , குளவாம்பல் என்பதைக் குளாம்பல் என்றும் , யாவர் என்னும் வினாப்பெயரை யார், ஆர், என்றும் , யார் என்னும் குறிப்புவினையை ஆர் என்றும் , எவன் என்னும் குறிப்புவினையை என் , என்னை , என்ன என்னும் , தஞ்சாவூர் என்பதைத் தஞ்சை என்றும் வழங்கும் இவை முதலானவை மரூஉ.

2.தகுதி வழக்கு

இடக்கரடக்கல் என்பது , நன்மக்களிடத்தே சொல்லத் தகாத சொல்லை , அவ்வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டாற் சொல்வது . மங்கலம் என்பது மங்கலம் இல்லாததை ஒழித்து மங்கலமாகச் சொல்வது . குழூஉக்குறி என்பது , ஒவ்வொரு கூட்டத்தார் யாதாயினும் ஒரு காரணம்பற்றி ஒரு பொருளினது சொற்குறியை ஒழித்து வேறொரு சொற்குறியால் சொல்வது . இம் மூன்றும் , இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லால் சொல்வது தகுதியன்று , வேறு ஒரு சொல்லால் சொல்வது தகுதி என்று நினைத்துக் கூறுதலால் , தகுதி வழக்கு எனப்பட்டன.

1. மலம் கழீஇ வருதும் என்பதைக் கால்கழீஇ வருதும் என்றும் , பீ என்பதைப் பகரவீ என்றும் , பவ்வீ என்றும் வழங்கும் இவை முதலானவை இடக்கரடக்கல்.

2. செத்தாரைத் துஞ்சினார் என்றும் , ஓலையைத் திருமுகம் என்றும் , காராட்டை வெள்ளாடு என்றும் , இடுகாட்டை நன்காடு என்றும் வழங்கும் இவை முதலானவை மங்கலம்.

(3). பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றும் யானைப்பாகர் ஆடையைக் காரை என்றும், வேடர் கள்ளைச் சொல்விளம்பி என்றும் வழங்கும் இவை முதலானவை குழூஉக்குறி