இடுகுறி காரணம் மரபு ஆக்கம் தொடர்ந்து = இடுகுறியும் காரணக்குறியும் மரபினையும் ஆக்கப்பாட்டினையும் தொடர்ந்து ; தொழில்அல காலம் தோற்றா = வினையாலணையும் காரணக் குறியொன்றும் காலம்காட்ட அல்லாதன காலம் காட்டாதனவாகி , வேற்றுமைக்கு இடன் ஆய் - எட்டுவேற்றுமையும் சார்தற்கு இடமாகி; திணை பால் இடத்து ஒன்று ஏற்பவும் = இரு திணையிலும் ஐம்பாலிலும் மூவிடத்திலும் ஒன்றனை ஏற்பனவும் , பொதுவும் = பலவற்றினை ஏற்பனவும் , ஆவன பெயர் - ஆகி வருவன பெயர்களாம் . 1. மரம் , விள , பனை என்பன இடுகுறி மரபு . 2. அவன் , அவள் , விலங்கு , பறவை என்பன காரணக்குறி மரபு. 3. "பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே யென்பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலு மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங் கானவேன் முட்டைக்குங் காடு என்னும் பொய்யாமொழிப் புலவர் பாட்டில் வேட்டுவக் குமரன் தன்பெயர் முட்டை என்றது இடுகுறியாக்கம் . 4. பொன்னன் , பூணன் , மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே என்பன காரணக் குறியாக்கம் . 5. நடந்தவனை, நடந்தோனை என்பன வினையாலணையும் காரணக்குறி காலம் காட்டின. மரம் , பனை முதலாகிய இடுகுறிப் பெயரும் , அவன் , அவள் முதலாகிய காரணப் பெயரும் , அவ் இலக்கணங்களோடு தோற்றிய பொருள்களுக்கு எல்லாம் தொன்றுதொட்டு மரபு பற்றி வருவன , முட்டை முதலாகிய இடுகுறிப்பெயரும் , பொன்னன் முதலாகிய காரணப் பெயரும் , மரபு போலத் தொன்று தொட்டு வருதல் இன்றி நடுவிலே ஒருவரால் ஆக்கப்பட்டு வருவன. 18
|