பெயரியல்

வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை

 
296இரண்டா வதனுரு பையே யதன்பொருள்
ஆக்க லழித்த லடைத னீத்தல்
ஒத்த லுடைமை யாதி யாகும்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இரண்டாவதன் உருபு ஐயே - இரண்டாம் வேற்றுமையினது உருபு முன் சொல்லப்பட்ட ஐ ஒன்றுமேயாம் அதன் பொருள் - அதன் பொருள்களாவன ஆக்கல் = ஆக்கப்படபொருளும் அழித்தல் = அழிக்கப்படு பொருளும் அடைதல் = அடையப்படுபொருளும் நீத்தல் = துறக்கப்படு பொருளும் ஒத்தல் = ஒக்கப்படுபொருளும் உடைமை = உடைமைப்பொருளும் ஆதி ஆகும் = முதலியனவாக அவ் உருபை ஏற்ற பெயர்ப்பொருள்கள் வேறு பட்ட செயப்படு பொருள்களாம்.

குடத்தை வனைந்தான் ......... ஆக்கப்படுபொருள்
கோட்டையை இடித்தான் ........ அழிக்கப்படுபொருள்
ஊரை அடைந்தான் ............. அடையப்படுபொருள்
மனைவியைத் துறந்தான் ...... துறக்கப்படுபொருள்
புலியை ஒத்தான்..........ஒக்கப்படுபொருள்
பொன்னை உடையான்......உடைமைப்பொருள்

செயப்படுபொருளாவது வினைமுதல் தொழில் பயன் உறுவது. செயப்படுபொருள், செய்பொருள். கருமம். காரியம் என்பன, ஒருபொருள் சொற்கள்.

குடத்தை வனைந்தான் என்புழி, மண்கூட்டுகை , திரிகை சுழற்றுகை முதலியன வினைமுதலினது தொழில் குடத்தினது தோன்றுதல் அத்தொழிலின் பயன் அப்பயனுறுவது குடம் ஆதலால் குடம் செயப்படுபொருள்.

கோட்டையை இடித்தான் என்புழிக் கோட்டையை இடித்தல் வினைமுதலினது தொழில்,அதனது வடிவு குலைதல் அத்தொழிலின் பயன், அப்பயன் உறுவது கோட்டை ஆதலால் கோட்டை செயப்படுபொருள்.

ஊரை அடைந்தான் என்புழி, நடந்து செல்லுதல் வினைமுதலினது தொழில்; ஊரைச்சேர்தல் அத்தொழிலின் பயன் ,அப்பயன் உறுவது ஊர் ஆதலால் ஊர் செயப்படுபொருள்

மனைவியைத் துறந்தான் என்புழி, வெறுத்து விடுதல் வினைமுதலினது தொழில் உரிமைக்கேடு அத்தொழிலின் பயன் அப்பயன் உறுவது மனைவி ஆதலால் மனைவி செயப்படுபொருள்.

புலியை ஒத்தான் என்புழி, அஞ்சாது பாய்ந்து கொல்லுதலால் புலியை உவமானமாகக் கொள்ளுதல் வினைமுதலினது தொழில், உவமானமாகக் கொள்ளப்படுதல் அத்தொழிலின் பயன் ,அப்பயன் உறுவது புலி ஆதலால் புலி செயப்படுபொருள் .

பொன்னையுடையன் என்புழிச் , சம்பாதித்தல் வினைமுதலினது தொழில் ; தனது ஆகுகை அத்தொழிலின் பயன், அப்பயன் உறுவது பொன் ஆதலால் பொன் செயப்படுபொருள் ,

ஆதி என்றதனால் , வீட்டை விரும்பினான் , நூற்பொருளை அறிந்தான் என விரும்புதலும் அறிதலுமாகிய வினைமுதல் தொழில்களுக்கு விடயமாகிய வீடும் நூற்பொருளும் செயப்படு பொருள் ஆகுகை முதலானவையும் கொள்க .

அச்செயப்படுபொருள் கருத்தில் செயப்படுவதும் , கருத்தின்றிச் செயப்படுவதும் , இருமையிற் செயப்படுவதும் என மூவகைப்படும் .

1. சோற்றையுண்டான் என்புழிச், சோறு, உண்ணப்படுவதாக வினைமுதலால் இச்சிக்கப்பட்ட, செயப்படுபொருள்.

2. சோற்றைக் குழைத்தான் என்புழிச், சோறு, குழைக்கப்படுவதாக வினைமுதலால் இச்சிக்கப்படாத, செயப்படுப்பொருள்.

3.பதரையும் நெல்லையும் பணத்திற்குக் கொண்டான் என்புழிப் பதர், கொள்ளப்படுவதாக வினை முதலால் இச்சிக்கப்படாத , செயப்படுப்பொருள், நெல் , கொள்ளப்படுவதாக வினைமுதலால் இச்சிக்கப்பட்ட செயப்படுப்பொருள்.

செயப்படுப்பொருள் குன்றாத முதல் நிலைகளின்மேல் 'வி' 'பி' முதலிய விகுதிகள் புணர்ந்து வருவனவாகிய பிறவினைகளுள்ளே, சிலவற்றிற்கு, இயற்றும் வினைமுதல் இரண்டாம் வேற்றுமையில் வருதலால், இரண்டு செயப்படுபொருள் வரும், சிலவற்றிற்கு, இயற்றும் வினைமுதல் மூன்றாம் வேற்றுமையில் வருவதால், செயப்படு பொருள் ஒன்றேவரும். இரண்டு வாராவாம்.

1. பகைவரைச் சிறைச்சாலையை அடைவித்தான், சாத்தனைச் சோற்றை உண்பித்தான்.

2. கொற்றனால் பூதனைக் கொல்வித்தான், சாத்தனால் பசுவைப் புரப்பித்தான்.

செயப்படுபொருள் குன்றாத தன்வினைகளுள்ளே. கறத்தல், குறைத்தல் முதலிய சில வினைகளுக்கு இரண்டு செயப்படுபொருள்கள் வருதலும் உண்டு; வரினும் முன் நின்ற செயப்படுபொருள் சிறப்புடைத்து அன்று எனக் கொள்க.

பசுவைப் பாலைக்கறந்தான்; யானையைக் கோட்டைக் குறைத்தான் என வரும் . இவற்றுள் , கறத்தலாவது உள்ளிருக்கும் நெகிழ்ச்சிப் பொருள் பிரிவை உண்டாக்கும் தொழிலை உண்டாக்கும் தொழில் ; ஆதலால், வினைமுதல் தொழில்பயன் இரண்டாகவே, அப்பயன் உறுவதாகிய செயப்படுபொருளும் இரண்டாயின. எங்ஙனம் எனின்:- உள் இருக்கும் நெகிழ்ச்சிப்பொருள் பால், அப்பாற்கும் பசுவிற்கும் பிரிவை உண்டாக்கும் தொழில் பாலில் இருக்கும் வீழ்ச்சி; அவ்வீழ்ச்சியை உண்டாக்கும் தொழில் முலைபற்றி உருவல்; இவற்றுள் வீழ்ச்சித் தொழிலால் நிகழும் பிரிவாகிய பயன் உறுவது பசு எனவும் , முலைபற்றி உருவல் தொழிலால் நிகழும் வீழ்ச்சியாகிய பயன் உறுவது பால் எனவும் அறிக. மற்றை உதாரணமும் இப்படியே காண்க.

குறைத்தலாவது, இங்கே பிரிவை உண்டாக்கும் தொழிலை உண்டாக்குத் தொழில். இப்பசுவையும் யானையையும் செயப்படுபொருளாகக் கருதாது, நீக்கப் பொருளாகக் கருதின், பசுவினின்றும் பாலைக் கறந்தான், யானையினின்றுங் கோட்டைக் குறைத்தான் என ஐந்தனுருபும் , சம்பந்தப் பொருளாகக் கருதின் பசுவினது பாலைக் கறந்தான். யானையினது கோட்டைக் குறைத்தான் என ஆறன் உருபும் வரும் எனக் கொள்க.

இன்னும் அச்செயப்படுபொருள், அகநிலை ஆகவும், தானே கருத்தா ஆகவும், வரும்.

1. நடத்தலைச் செய்தான்; உண்டலைச்செய்தான் எனத் தெரிநிலை வினைகளை விரித்துரைக்கும் இடத்துச் செயப்படுபொருள் அகநிலையாய் வந்தது.
2. தன்னைக் குத்தினான் ; தன்னைப் புகழ்ந்தான் எனச் செயப்படுபொருளே கருத்தாவும் ஆயிற்று.

39