பெயரியல்

வேற்றுமை
பொதுவாகிய விளி உருபு

 
305இம்முப் பெயர்க்கண் ணியல்பு மேயும்
இகர நீட்சியு முருபா மன்னே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இம்முப்பெயர்க்கண் - முன் விளிக்கப்படும் என்ற மூவகைப் பெயர்களிடத்தும் , இயல்பும் ஏயும் இகரநீட்சியும் உருபு ஆம் மன் - இயல்பாதலும் ஏகாரமிகுதலும் இகரம் ஈகாரமாதலும் பெரும்பாலும் விளி உருபுகளாகும் .

1 . முனி கூறாய் , வேந்து கூறாய் , ஆடூஉக்கூறாய் , விடலை கூறாய் , கோக்கூறாய் , கோன் கூறாய் , வேள் கூறாய் , மாந்தர் கூறீர் , தோன்றல் கூறாய் , சேய் கூறாய் எனவும் , முனியே கூறாய் . வேந்தே கூறாய் எனவும், நம்பீ கூறாய் எனவும் உயர்திணைப் பெயர்களிலே மூன்று உருபுகளும் வந்தன .

2 . பிதாக் கூறாய் , ஆண் கூறாய் எனவும் , பிதாவே கூறாய் , ஆணே கூறாய் எனவும் . சாத்தீ கூறாய் எனவும் பொதுப்பெயர்களிலே மூன்று உருபுகளும் வந்தன .

3 . விளக்கொடியை , புல்வாய் கொடியை எனவும் , விளவே கொடியை , புல்வாயே கொடியை எனவும் , மந்தீ கொடியை எனவும் , அஃறிணைப் பெயர்களிலே மூன்று உருபுகளும் வந்தன , காட்டாது ஒழிந்த பெயர்களும் இப்படியே வரும் .

பெரும்பாலும் என்றதனால் , இவ் உருபுகள் சிலவற்றிற்குப் பொருந்தாமை உளவேல் கொள்க .

48