இருதிணைப் பெயரும் வினையும்- இரு திணையிலும் ஆண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகிய பெயர்ச்சொற்களும் அப்படிப்பட்ட வினைச்சொற்களும் , ஆண் பெணுள் ஒன்றனை ஒழிக்கும் குறிப்பினான= அவ் ஆண்பால் பெண்பால்களுள் ஒருபாலை நீக்கும் குறிப்பினால். 1. ஆயிரம் மக்கள் போர் செய்யப் போயினார் என்புழி, மக்கள் எனும் உயர்திணை ஆண் பெண் இருபாற்கும் பொதுப் பெயரும், போயினார் என்னும் உயர்திணை ஆண் பெண் இருபாற்கும் பொதுவினையும், போர் செயல் என்னும் குறிப்பினால் பெண்பாலை ஒழிந்தன. ' பெருந்தேவி பொறை உயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர், என்புழி, மக்கள் என்னும் பொதுப்பெயரும் உளர் என்னும் பொது வினைக்குறிப்பும், பொறை உயிர்த்த என்னும் குறிப்பினால் ஆண்பாலை ஒழித்தன [பொறையுயிர்த்தல் - பிரசவித்தல்]2. இப்பெற்றங்கள் உழவு ஒழிந்தன என்புழிப். பெற்றங்கள் என்னும் அஃறிணை ஆண் பெண் இருபாற்கும் பொதுப்பெயரும், ஒழிந்தன என்னும் அஃறிணை ஆண் பெண் இருபாற்கும் பொதுவினையும், உழவு என்னும் குறிப்பினால் பெண்பாலை ஒழித்தன. இப்பெற்றங்கள் பால் சொரிந்தன என்புழிப், பெற்றங்கள் என்னும் பொதுப்பெயரும், சொரிந்தன என்னும் பொதுவினையும் பால் என்னும் குறிப்பினால் ஆண்பாலை ஒழித்தன.
1
|