பொதுவியல்

தொகைநிலைத் தொடர்மொழி
வேற்றுமைத் தொகை

 
363இரண்டு முதலா மிடையா றுருபும்
வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 

இடை இரண்டு முதல் ஆம் ஆறு உருபும் = எழுவாய்க்கும் விளிக்கும் இடையே நின்ற இரண்டாவது முதலிய ஆறு வேற்றுமை உருபுகளும் , வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகை = தொக்க தொடர்மொழிகள் வேற்றுமைத் தொகைகளாம்.


நிலங் கடந்தான்....... இரண்டாம் வேற்றுமைத்தொகை.
தலை வணங்கினான் ..... மூன்றாம் வேற்றுமைத்தொகை.
சாத்தன் மைந்தன் ........ நாலாம் வேற்றுமைத்தொகை.
ஊர் நீங்கினான் ......... ஐந்தாம் வேற்றுமைத்தொகை.
சாத்தன் கை ............... ஆறாம் வேற்றுமைத்தொகை .
குன்றக் கூகை ........... ஏழாம் வேற்றுமைத்தொகை.

யானைக்கோட்டு நுனி குறைத்தான்- இது பன்மொழித் தொடர்.

இனி ஆறு உருபும் என்னும் முற்று உம்மையை எச்ச உம்மையாக்கிக், கைக்களிறு, பொற்குடம் என ஒரோ இடத்து உருபும் பொருளும் உடன் தொக்கனவும் வேற்றுமைத் தொகை எனக் கொள்க. அவை, விரியும் இடத்துக், கையை உடைய களிறு, பொன்னால் செய்த குடம் என விரியும்.

இனி ஆசிரியர் தொல்காப்பியனார் : "ஐயுங் கண்ணும் அல்லாப் பொருள்வயின் - மெய்யுருபு தொகா இறுதி யான" எனக் கூறுதலால், ஐஉருபும் கண்உருபும் அல்லாத நான்கு உருபும் இடையில் அன்றி இறுதியிலே தொகா எனவும், அவ் இரண்டு உருபும், நிலம் கடந்தான், கடந்தான் நிலம்; குன்றத்து இருந்தான், இருந்தான் குன்றத்து என இடையிலும் இறுதியிலும் தொகும் எனவும் கொள்க.

வேற்றுமை உருபுகள் இடையிலே தொகும் என்றார் ஆயினும், அவை விரிந்து நிற்கும் இடத்து எப்பொருள்படுமோ அப்பொருள்படும் இடத்தே தொக்கு நிற்கப்பெறும் ; அப் பொருள்படா இடத்தே தொக்கு நிற்கப் பெறாவாம்

சாத்தனை அடித்தான் என ஐயுருபு விரிந்து நிற்கும் இடத்துச் செயப்படுபொருள் படுதல்போலச் சாத்தன் அடித்தான் என ஐஉருபு தொக்கு நிற்கும் இடத்து அப்பொருள் படாமையால் இங்கே ஐஉருபு தொக்கு நிற்கப் பெறாது என்றறிக.

சாத்தனொடு வந்தான் என ஒடுஉருபு விரிந்து நிற்கும் இடத்து உடன் நிகழ்ச்சிப்பொருள் படுதல் போலச், சாத்தன் வந்தான் எனத் தொக்கு நிற்கும் இடத்து அப்பொருள் படாமையால். இங்கே ஒடுஉருபு தொக்கு நிற்கப்பெறாது என்றறிக.

12