இடுகுறி காரணப் பெயர் - இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் ஆகிய இரண்டும் , பொதுச் சிறப்பின- பல பொருளுக்குப் பொதுப்பெயராயும் ஒவ்வொரு பொருளுக்கே சிறப்புப் பெயராயும் வருவனவாம் . இடுகுறிப் பெயராவது ஒரு காரணமும் பற்றாது வழங்கி வரும் பெயர் . காரணப் பெயராவது யாதேனும் ஒரு காரணம் பற்றி வழங்கிவரும் பெயர். மரம் என்பது , ஒரு காரணமும் பற்றாது வழங்கும் பெயராய் மா , பலா முதலிய பல பொருள்களுக்கும் பொதுவாய் நிற்கையால் , இடுகுறிப் பொதுப் பெயர் . மா , பலா என்பன , ஒரு காரணமும் பற்றாது வழங்கும் பெயராய் , ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாய் நிற்கையால் , இடுகுறிச் சிறப்புப் பெயர் . அணி என்பது அணியப்படுதல் ஆகிய காரணம் பற்றி வழங்கும் பெயராய் , இடுவன , தொடுவன , கட்டுவன , கவிப்பன முதலிய ஆபரணங்கள் பலவற்றிற்கும் பொதுவாய் நிற்கையால் காரணப் பொதுப்பெயர் . முடி - கழல் என்பன , முடியில் கவிக்கப்படுவதும் கழலில் கட்டப்படுவதும் ஆகிய காரணம் பற்றி வழங்கும் பெயராய் , ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாய் நிற்கையால் காரணச் சிறப்புப்பெயர் . இனி இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் இச்சூத்திரத்திற்கு வேறும் ஒரு பொருள் உரைக்கப்படும் . அது வருமாறு :- இடுகுறி காரணப்பெயர் - இடுகுறி என்றும் காரணம் என்றும் சொல்லப்படும் இலக்கணங்களை உடைய பெயர்கள் , பொது - இடுகுறி காரணம் என்னும் இரண்டற்கும் பொதுவாயும் , சிறப்பின - இடுகுறிக்கே சிறப்பாயும் காரணத்திற்கே சிறப்பாயும் வருவனவாம் . எனவே இடுகுறிப் பெயர் , காரணப்பெயர் , காரண இடுகுறிப்பெயர் எனப் பெயர் மூவகைப்படும் என்றார் ஆயிற்று . காரண இடுகுறிப் பெயராவது , காரணம் கருதிய பொழுது அக் காரணங்களை உடைய பல பொருள்களுக்கும் செல்வதாயும் , காரணம்கருதாதபொழுது இடுகுறியளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாய் உள்ள பெயராம் . பொன் என்பது இடுகுறிப் பெயர் . 'பொன்னன்' என்பது காரணப் பெயர் . முக்கணன் , அந்தணன் , முள்ளி , கறங்கு என்பன காரண இடுகுறிப்பெயர் . முக்கணன் என்பது காரணங்கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்கும் செல்லுதலாலும் , காரணம் கருதாதபொழுது இடுகுறி அளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும் , காரண இடுகுறிப் பெயர் ஆயிற்று . மற்றைப் பெயர்களுக்கும் இப்படியே காண்க .
|