இசை கெடின்- பாட்டில் ஓசை குறையின் , மொழி முதல் இடை கடை நிலை நெடில் - மொழிக்கு முதலிலும் நடுவிலும் இறுதியிலும் நின்ற நெட்டெழுத்து ஏழும் , அளபு ஏழும் - அவ் ஓசையை நிறைக்கத் தம்தம் மாத்திரையின் மிக்கு ஒலிக்கும் , அவற்று அவற்று இனக்குறில் குறி - அப்படி அளபெடுத்தமையை அறிதற்கு. அவற்றின் பின் அது அதற்கு இனமாகிய குற்றெழுத்துக்கள் வரிவடிவில் அறிகுறியாய் வரும் . "ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை யாஅது என்னும் அவர் ." எனவும் , " உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு ." எனவும் , "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப் பிற்கு நல்ல படாஅ பறை ." எனவும் வரும் . இவற்றுள் , 'ஓதல்' என்பதில் ஓ என்னும் நெட்டெழுத்து மொழிக்கு முதலிலும் , 'உறார்' என்பதில் ஆ என்னும் நெட்டெழுத்து இடையிலும் , 'படா' என்பதில் ஆ என்னும் நெட்டெழுத்துக் கடையிலும் அளபெடுத்தவாறு காண்க . 'செறாய்' என்பதில் ஆ என்னும் நெட்டெழுத்து ஈரளபெடுத்து வந்தது . செய்யுளோசை குன்றாவிடத்தும் இன்னிசை நிறைக்கவும் சொல்லிசை நிறைக்கவும் வரும் அளபெடைகளும் உண்டு . இன்னிசை நிறைக்க வரும் அளபெடையாவது குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீண்டு இன்னிசை நிறைத்தற் பொருட்டு அளபெடுப்பது . சொல்லிசை நிறைக்க வரும் அளபெடை ஆவது பெயர்ச்சொல் வினையெச்சச் சொல்லின் இசையை நிறைத்தற் பொருட்டு அளபெடுப்பது . " கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை ." இதனுள் , 'கெடுப்பதும்' , 'எடுப்பதும்' என நிற்பினும் செய்யுள் ஓசை குன்றாது ஆயினும் , இன்னிசை நிறைத்தல் பொருட்டுக் குறில் நெடிலாய் அளபெடுத்தமை காண்க . " உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன் ." இதனுள் , 'உரனசை' , 'வரனசை' என நிற்பினும் செய்யுள் ஓசை குன்றாது ஆயினும் , விருப்பம் எனப் பொருள்படும் நசை என்னும் பெயர்ச்சொல் , விரும்பி என வினை எச்சப் பொருள்படும் பொருட்டு வினையெச்சச் சொல்லாதற்கு 'நசைஇ' என அளபெடுத்தமை காண்க . நெட்டெழுத்து ஏழும் மொழிக்கு முதல், இடை, கடை என்னும் மூன்றிடத்தும் அளபெடுக்கும் எனவே , உயிரளபெடை இருபத்தொன்றாதல் பெறப்படும் , ஒளகாரம் மொழிக்கு நடுவிலும் கடையிலும் வாராமையால் அவ்விரண்டும் கழிக்க, நின்ற உயிரளபெடை பத்தொன்பது , அப்பத்தொன்பதோடு இன்னிசை நிறைக்க வரும் அளபெடை சொல்லிசை நிறைக்க வரும் அளபெடை என்னும் இரண்டும் கூட்ட , உயிரளபெடை இருபத்தொன்றாதல் காண்க .
|