எழுத்தியல்

முதனிலை
பொதுவிதியுட் சிறப்புவிதி

 
106சுட்டியா வெகர வினாவழி யவ்வை
ஒட்டி ஙவ்வு முதலா கும்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சுட்டு யா (வினா) எகர வினா வழி-மூன்று சுட்டும் யா வினாவும் எகர வினாவுமாகிய இடைச்சொற்களின் பின், அவ்வை ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்-அகரத்தைச் சேர்ந்து ஙகர மெய்யும் (சொல்லுக்கு) முதலாகும் .

அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என வரும்.

ஙனம் என்பது இடத்தையும் தன்மையையும் உணர்த்தும் பல பொருள் ஒரு சொல்.

ஒரு விதத்தினாலே முதலாகையால் , ஙவ்வும் என இழிவு சிறப்பும்மை கொடுத்துக் கூறினார் . முதல் ஆகாது என்பவருக்கு உடன்படுதலும் மறுத்தலும் ஆதலால் , இது பிறர் தம் மதம் மேற் கொண்டு களைவு என்னும் மதம் .

முதலாம் என்ற பத்து உயிர்மெய்யுள் வகரம் முதலிய நான்கினையும் விதந்து கூறவே , ஒழிந்த ஆறு மெய்யும் பன்னிரண்டு உயிரோடும் முதலாம் என்பது அருத்தாபத்தியால் பெற்றாம் .