உயிரீற்றுப் புணரியல்

இகர வீற்றுச் சிறப்புவிதி

 
175சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சுவைப் புளி முன் = அறு சுவையுள் ஒன்றை உணர்த்துகின்ற புளி என்னும் பெயர் முன் , இன மென்மையும் தோன்றும் = வரும் வல்லெழுத்துக்கள் மிகுதலன்றி அவற்றிற்கு இனமாகிய மெல்லெழுத்துக்களும் ஒரோவிடத்து மிகும் .

புளிங்கறி, புளிஞ்சோறு , புளிந்தயிர் , புளிம்பாளிதம் என வரும்.

புளிப்பாகிய கறி எனவும், புளிப்பையுடைய கறி எனவும் விரிக்கப்படுதலால், இரு வழிக்கும் இவையே உதாரணமாம் என்க.

மென்மையும் என்ற இறந்தது தழீஇய இழிவு சிறப்பும்மையால், புளிக்கறி எனப் பொதுவிதியால் வரும் வல்லெழுத்து மிகலே சிறப்புடைத்து எனக் கொள்க.

'இன மென்மையும் தோன்றும்' என்றது ' இயல்பிலும் விதியினும் ' என்னும் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்பு விதி.