உருபு புணரியல்

உருபு புணர்ச்சிக்குச சிறப்புவிதி

 
251சுட்டின்முன் னாய்த மன்வரிற் கெடுமே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சுட்டின் முன் ஆய்தம் - அஃது , இஃது , உஃது என்னும் மூன்று சுட்டுப்பெயர்களுள் அம்மூன்று சுட்டெழுத்துக்களின் முன் நின்ற ஆய்தம் , அன் வரின் கெடும் - உருபுகள் புணரும் இடத்து அன் சாரியை வரின் கெடும் .

அஃது + ஐ = அதனை , அஃதை ; இஃது + ஐ = இதனை , இஃதை ; உஃது + ஐ = உதனை , உஃதை எனச் சாரியை விகற்பித்து வருதலும் வந்தவழி ஆய்தம் கொடுதலும் காண்க .

அன் சாரியை வருதலை நோக்கி ஆய்தம் கெட்ட வழி , அது , இது , உது என ஆய்தம் இல்லாச் சுட்டுப் பெயர்களாய்ப் , பின்பு அன் சாரியை பெறுதலால் , ஆய்தமில்லாச் சுட்டுப் பெயர்களுக்கும் இதுவேவிதிஎனக் கொள்க .

அன் வருதலைப் பராமுகமாகக் கூறாலால் , குவ்வுருபு புணரும்போது அதற்கு என அன் சாரியை தனித்து வருதலே அன்றி அதனுக்கு என உகரச் சாரியையுடன் வருதலும் கொள்க .