பதவியல்

பகுதி
ஏவற் பகுதிக்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி

 
138செய்யென் வினைவழி விப்பி தனிவரிற்
செய்வியென் னேவ லிணையினீ ரேவல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
செய் என் வினை வழி விப்பி தனி வரின்-செய் என்னும் வாய்பாட்டு முதனிலைத் தனி வினையின் பின் விவ் விகுதியாயினும் பிவ் விகுதியாயினும் தனித்து வருமாயின் , செய்வி என் ஏவல்-செய் என்னும் ஏவலின்மேல் ஓர் ஏவலாய்ச் செய்வி என்னும் வாய்பாட்டு ஏவற் பகுதியாம் , இணையின் ஈரேவல்-அவ்வினையின் பின் இவ் விகுதிகள் தன்னொடும் பிறிதொடும் இணைந்து வருமாயின் செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஏவற் பகுதியாம் .

நடப்பியாய் , நடப்பிப்பியாய் , வருவியாய் , வருவிப்பியாய்

என வரும் .

சிறுபான்மை உரையில் கோடல் என்னும் உத்தியால் கு , சு , டு , து , பு , று என்னும் ஆறு விகுதிகளுள் ஒன்று பெற்றும் சில பகுதிகள் விகாரப்பட்டும் அப்படி வரும் எனக் கொள்க .

போ-போக்கு , பாய்-பாய்ச்சு , உருள்-உருட்டு ,
நட-நடத்து , எழு-எழுப்பு , துயில்-துயிற்று .

எனவும் ,

இயங்கு-இயக்கு , திருந்து-திருத்து , தோன்று
தோற்று , ஆடு-ஆட்டு , தேறு-தேற்று
உருகு-உருக்கு

எனவும் வரும் .