செய்யிய என்னும் வினையெச்சம் - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்ச வினையும் , பல் வகைப் பெயரினெச்சம் - பல வகைப்பட்ட பெயரெச்ச வினையும் , ( பல்வகை ) முற்று - பல வகைப்பட்ட முற்று வினையும் , ஆறனுருபு - ஆறாம் வேற்றுமை அகர உருபும் , அஃறிணைப் பன்மை - அஃறிணைப் பன்மைப் பெயரும் , அம்ம - அம்ம என்னும் உரையசை இடைச்சொல்லும் , முன் இயல்பு - ஆகிய அகர ஈற்றுச் சொற்கள் ஆறன் முன்னும் வல்லெழுத்துக்கள் இயல்பாம் . முதலிலும் ஈற்றிலும் அகர ஈற்றுச் சொல் வைத்தமையால் , இடை நின்றனவும் அகர ஈற்றுச் சொற்கள் என்பது பெற்றாம் . பல் வகைப் பெயரெச்சம் என்றது , வினையடி நான்கினும் பிறந்த பெயரெச்சங்களை பல் வகை முற்றென்றது , வினையடி நான்கினும் பிறந்த முற்று வினைகளை . வினையடி நான்காவன :- இயல்பாகிய வினையடி ஒன்றும் , மற்றைப் பெயர் , இடை , உரி அடியாகப் பிறந்த செயற்கை வினையடி மூன்றுமாம் . முன்னே முற்றென விதந்தமையால் , அஃறிணைப் பன்மை என்றது பெயரை . 1 . உண்ணிய கொண்டான் , சென்றான் , தந்தான் , போயினான் எனச் செய்யிய என்னும் வினையெச்சம் முன் இயல்பாயின . உண்ணிய = உண்ண . 2 . உண்ட , உண்ணாநின்ற , உண்ணாத எனவும் , கடைக்கணித்த , சித்திரித்த , வெளுத்த , சினவிய , கறுவிய , அமரிய எனவும் , திண்ணென்ற , பொன்போன்ற எனவும் , சான்ற, உற்ற எனவும் வரும் , நால்வகைத் தெரிநிலைப் பெயரெச்ச வினை முன்னும் , அமர்முகத்த , கடுங்கண்ண , சிறிய , பெரிய , உள , இல , பல , சில , எனவும் , பொன்னன்ன எனவும் ,கடிய எனவும் வரும் மூவகை , வினைக்குறிப்புப் பெயர் எச்சம் முன்னும் , குதிரை , செந்நாய் , தகர் , பன்றி , இவற்றை வருவித்து , உண்ட குதிரை , உண்ட செந்நாய் , உண்ட தகர் உண்ட பன்றி என முறையே கூட்டிப் , பல்வகைப் பெயரெச்சம் முன் இயல்பாதல் காண்க . குறிப்புவினை , இயற்கை வினையடி ஏலாமையால் , மூவகை ஆயிற்று . 3 . உண்டன , உண்ணா நின்றன , உண்பன , உண்ணாதன என்னும் தெரிநிலை வினைமுற்று முன்னும் , அமர்முகத்தன , கரியன என்னும் குறிப்பு வினைமுற்று முன்னும் , குதிரை , செந்நாய் தகர் , பன்றி இவற்றை வருவித்து , உண்டன குதிரை , உண்டன செந் நாய் எனக்கூட்டி , முற்று முன் இயல்பாதல் காண்க . இனி , மேற்காட்டிய பெயரெச்ச வினைகட்கும் , அன் பெறாத அகர ஈற்றுப் பல்வகை முற்று வினைகட்கும் , பொருள் வேறுபாடு அன்றிச் சொல் வேறுபாடு இன்மையால் , அவையே உதாரணமாகக் கொள்க . வாழ்க கொற்றா , சாத்தா , தேவா , பூதா என வியங்கோள் முற்றின் முன் இயல்பாயின . வாழிய என்பதனோடும் இப்படியே கூட்டுக . முற்று முன் இயல்பாம் எனவே , அருத்தாபத்தியால் ; இவ் வினைமுற்று வினையெச்சமாகியும் குறிப்புமுற்று ஈரெச்சம் ஆகியும் நின்றபோது வரும் வல்லினம் இயல்பாதலும் கொள்க . வரலாறு:- உண்ட கண்டன , இது உண்டு கண்டன எனப் பொருள்படுவதால் , வினைமுற்று வினையெச்சமாயிற்று . அமர்முகத்த கலக்கின . இது அமர்முகத்தவாகிக் கலக்கின எனப் பொருள்படுவதால் , குறிப்புமுற்று வினை யெச்சமாயிற்று . அமர்முகத்த குதிரை வந்தன இது அமர்முகத்தனவாகிய குதிரை வந்தன எனப் பொருள்படுவதால் , குறிப்பு முற்றுப் பெயரெச்சம் ஆயிற்று . இவற்றின் முன் வல்லினம் இயல்பாதல் காண்க . 4 . தன கைகள் , செவிகள் , தாள்கள் , பதங்கள் என ஆறன் உருபின் முன் இயல்பாயின . 5 . பல குதிரைகள் , செந்நாய்கள் , தகர்கள் , பன்றிகள் எனவும் , பல கொடுத்தான் , செய்தான் , தந்தான் , பெற்றான் எனவும் , அஃறிணைப் பன்மைப்பெயர் முன் இரு வழியும் இயல்பாயின . 6 . அம்ம கொற்றா , சாத்தா , தேவா , பூதா என உரையசை இடைச்சொல் முன் இயல்பாயின . இது " இயல்பினும் விதியினும் " என்னும் சூத்திரத்தால் ( சூ. 165 ) எய்தியது விலக்கல் . அ.கு : அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக் கூறிய மாத்திரத்தால் அதன் குறிப்பைக் கொண்டு கூறப்படாத மற்றொரு பொருளையும் அறிவது .
|