செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும் = செந்நதமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலங்களிலும் , ஒன்பதிற்றிரண்டில் தமிழ் ஒழி நிலத்தினும் = பதினெண் மொழிகளுள்ளே தமிழ்நிலம் ஒழிந்த நிலங்களிலும் உள்ளோர் ; தங்குறிப்பின திசைச்சொல் என்ப = தம்குறிப்பினவாய் அத்திசைகளினின்றும் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன திசைச்சொல் என்று சொல்லுவர் புலவர் . கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டையும் " தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சே ரேதமில் பன்னிருநாட் டெண். என்னும் வெண்பாவால் அறிக. புனல் நாடென்றது சோழநாட்டை. இவற்றுள், செந்தமிழ்ப்பாண்டிநாட்டுக்குத் தென்திசையிலுள்ள தென்பாண்டிநாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும் சோற்றைச் சொன்றி என்றும் , குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும் , குட நாட்டார் தந்தையை அச்சன் என்றும் , கற்காநாட்டார் வஞ்சரைக் கையர் என்றும் , வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும் , பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும் , அருவா நாட்டார் . செய்யைச் செறு என்றும் , சிறுகுளத்தைக் கேணி என்றும் , அருவா வடதலையார் புளியை எகின் என்றும் , சீதநாட்டார் தோழனை எலுவன் என்றும் , தோழியை இருளை என்றும் வழங்குவர் . பிறவும் வந்த இடத்துக் காண்க . இனித் தமிழ்நிலத்தைச் சூழ்ந்த பதினேழ் நிலத்தையும் ; " சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம் வங்கங் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே என்னுங் கட்டளைக் கலித்துறையால் அறிக. சிங்களம் என்றது ஈழநாட்டை. அந்தோ என்பது சிங்களச் சொல் . எருத்தைப் பாண்டில் என்பது தெலுங்குச் சொல் மாமரத்தைக் கொக்கு என்பது துளுவச்சொல். ஒழிந்தன வந்த இடங்களில் காண்க. 16
|